5. கருவுற்ற பெண்மணி
சேதவனம் என்னும் இடத்திலே, பெருமான் புத்தர், வழக்கம் போல, மாலை நேரத்திலே அறவுரைகளை விளக்கிக் கூறி, விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். நகரத்திலிருந்து, மக்கள் கூட்டம், கூட்டமாகத் திரண்டு வந்து, சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பெருமான் புத்தருடைய செல்வாக்கு அதிகமாயிருந்த படியினாலே நகரத்துச் செல்வர்களும், பெரியோர்களும் வந்து, இக்கூட்டத்திலே அமர்ந்திருந்தார்கள். ஆண்கள் ஒரு புறம்; பெண்கள் ஒரு புறம் அமர்ந்திருந்தனர். புத்தருடைய சீடர்கள் இன்னொரு புறத்தில் அமர்ந்திருந்தார்கள்.
சொற்பொழிவு உச்ச நிலையை அடைந்தது. கூட்டத்திலே எல்லோரும் தம்மை மறந்து, பெருமான் புத்தர் கூறுவதையே ஊன்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அமைதியான இந்தப் பெருங்கூட்டத்திலே, புத்தர் பெருமானுடைய குரல் வெண்கல ஓசை போலக் கணீர் என்று ஓலித்துக் கொண்டிருந்தது.
இந்த வேளையிலே, ஏறத்தாழ முப்பது அகவையுள்ள ஒரு பெண்மணி இந்தக் கூட்டத்தில் வந்தாள். வந்து, கூட்டத்தைக் கடந்து, புத்தர் பெருமான் அமர்ந்திருந்த இடத்திற்கு அண்மையிலே சென்றாள். இவள் கண்ணையும், மனத்தையும் கவரத் தக்க நல்ல அழகு வாய்ந்தவள்; நிறைந்த சூல் கொண்டவள் போல, அவள் வயிறு பருத்திருந்தாள். துறவிப் பெண்கள்