உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. கொலைக்‌ குற்றம்‌

சேதவனம்‌ என்னும்‌ ஆராமத்திலே புத்தர்‌ பெருமான்,‌ துறவிகள்‌ குழுவோடு எழுந்தருளியிருந்த போது, வழக்கம் போலக்‌ காலையிலும்,‌ மாலையிலும்‌ சொற்பொழிவு செய்து வந்தார்‌. அவருடைய சொற்‌பொழிவைக்‌ கேட்பதற்காக, நகரத்திலிருந்து மக்கள்‌ திரள்‌ திரளாகச்‌ செல்வார்கள்‌. இது நாள் தோறும்‌ வழக்கமாக நடந்து வந்த நிகழ்ச்சி. மாலை நேரச்‌ சொற்‌பொழிவு முடிந்தவுடன்,‌ மக்கள்‌ நகரத்திற்குத்‌ திரும்பி வரும் போது, இரவு வந்து விடும்‌,

ஒரு நாள்‌ இரவு, மக்கள்‌ நகரத்திற்குத்‌ திரும்பி வந்து கொண்டிருந்த போது, சுந்தரி என்னும்‌ துறவிப்‌ பெண்‌ அவர்கள்‌ எதிரில்‌ வந்து கொண்டிருந்தாள்‌. சுந்தரி தன்‌ பெயருக்கேற்ப அழகுள்ளவள்‌. நடுத்தர வயதுள்ளவள்‌. புத்த மதத்திற்குப்‌ புறம்பான வேறு மதத்தைச்‌ சேர்ந்த துறவியாகிய இவள்‌, பூ, பழம்‌, சந்தனம்‌ முதலியவற்றைக்‌ கையில்‌ எடுத்துக் கொண்டு, சேதவனச் சாலை வழியாக வருவதை மக்கள்‌ கண்டார்கள்‌. ‘இந்த இரவு வேளையில்‌, இந்தப்‌ பொருள்களுடன்‌ தனித்து இவள்‌ எங்கே போகிறாள்?’ என்று மக்களுக்கு வியப்புத்‌ தோன்றிற்று. அவர்கள்‌, “எங்கே அம்மா போகிறீர்கள்‌?” என்று கேட்டார்கள்‌. “கௌதமரிடம்‌ போகிறேன்‌,” என்று அவள்‌ விடை கூறினாள்‌.

அடுத்த நாள்‌ காலையில்,‌ மக்கள்‌ சேதவன ஆராமத்‌திற்குப்‌ புத்தரின்‌ அறிவுரைகளைக்‌ கேட்கச்‌ சென்று