36
இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்
துறவியாகிய கௌதம புத்தருக்கும் ஏதோ கூடா ஒழுக்கம் உண்டு போல் தெரிகிறது’ என்று பேசிக் கொண்டார்கள். ‘ஊர் வாயை மூட உலை மூடியுண்டா?’ அதிலும், அவளே தன் வாயால் சொல்லும் போது, மக்கள் அவதூறு பேசுவதற்குச் சொல்ல வேண்டுமா?
இந்தச் செய்தி, நகரத்தில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பேசப்பட்டது. இதன் உண்மையை அறிய, மக்கள் காலையிலும், மாலையிலும் அவ்வழியாக வரத் தொடங்கினார்கள். சுந்தரி தவறாமல், அவர்களுக்கு எதிர்ப்பட்டுக் கொண்டேயிருந்தாள். நகரம் முழுவதும், இதைப் பற்றிய பேச்சு பேசப் பட்டது. புத்த சமயத் துறவிகளைப் பற்றியும், கௌதம புத்தரைப் பற்றியும் இழிவாகப் பேசத் தலைப்பட்டனர்.
ஒரு நாள் காலையில், சுந்தரி கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். அவளுடைய உடம்பு, சேதவன ஆராமத்துக்கு அண்மையில், குப்பை மேட்டிலே கிடந்தது. மார்பில் கத்தியால் குத்துப்பட்டுப் பிணமாகக் கிடந்தாள். இச்செய்தியறிந்து, ஏராளமான மக்கள் கூட்டம் கூடி விட்டனர். சுந்தரி சார்ந்திருந்த சமயத் துறவிகளும், பெருங் கூட்டமாய் அவ்விடம் வந்து விட்டனர். அவர்கள் கூச்சலிட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர். “எங்கள் சமயத்துச் சுந்தரியை, புத்த சமயத் துறவிகள் கொலை செய்து விட்டார்கள்” என்று குற்றம் சாட்டினர். பிறகு அந்தத் துறவிகள் கூட்டமாகச் சேர்ந்து, அரசனிடம் முறையிடச் சென்றார்கள். அவர்கள் பின்னே, மக்கள் கூட்டம் பெருந்திரளாகச் சென்றது.