உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்

கொண்டு போனார்கள்‌. போகும் போது, “புத்த சமயத் துறவிகள்‌ சுந்தரியைக்‌ கொன்று விட்டார்கள்‌,” என்று தெருவில்‌ கூச்சலிட்டுக் கொண்டு சென்றார்கள்‌. புத்த சமயத் துறவிகளைப்‌ பற்றியும்‌, கௌதம புத்தரைப்‌ பற்றியும்‌ முன்னமே ஏற்பட்டிருந்த பழி மொழியோடு, இவர்கள்‌ பரப்பிய செய்தி, மக்களிடத்தில்‌ வெறுப்பையுண்டாக்கிற்று. மக்கள்‌ புத்த சமயத் துறவிகளைப் பற்றிப்‌ பலவாறு அலர்மொழி பேசத்‌ தொடங்கினார்கள்‌.

போலித்‌ துறவிகள்‌, பகல்‌ துறவிகள்‌ என்றும்‌, கொலைகாரக் கூட்டம்‌ என்றும்‌, மக்களை ஏமாற்றுகிறவர்கள்‌ என்றும்,‌ நகரமெங்கும்‌ புத்த சமயத் துறவிகளைப்‌ பற்றிப்‌ பேசிக் கொண்டார்கள்‌. துறவிகளைக்‌ காண்கிற இடத்தில்‌, அவர்களைப்‌ பழித்துப்‌ பேசியும்‌, இழிவு படுத்‌தியும்‌ பெருமைக் குறைவு செய்யத்‌ தொடங்கினார்கள்‌. அவர்கள் மீது வசை மாரி பொழியப்பட்டது. அத்துறவிகளுக்கு முன்பிருந்த பெருமதிப்பும்‌, சிறப்பும் பறி போயின. இகழ்ச்சியும்‌, ஏசலும்,‌ கேலிப் பேச்கம்‌ அவர்களின்‌ மேல்‌ வீசி எறியப்பட்டன.

புத்த மதத்‌ துறவிகளின்‌ நிலைமை துன்பத்துக்‌ கிடனாகி விட்டது. அவர்கள்‌ வெளியே தலை காட்ட முடியவில்லை. அவர்கள்‌ புத்தர்‌ பெருமானிடம்‌ சென்று, தங்கள் மீது மக்கள்‌ சுமத்தும்‌ பழியையும்‌, இகழ்ச்சிகளையும்‌ கூறினார்கள்‌. தங்கள் மீது மக்களுக்கு ஏற்பட்‌டுள்ள வெறுப்பை நீக்கா விட்டால்‌, தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும்‌ வீண் பழியைப்‌ போக்கா விட்டால், புத்த மதமே அழிந்து விடும்‌ என்று முறையிட்டார்கள்‌.