கொலைக் குற்றம்
39
புத்தர் பெருமான் அமைதியோடு, அவர்கள் கூறியவற்றைக் கேட்டார். கடைசியில், “துறவிகளே! பொய் கூறுகிறவர்கள், நரகம் அடைவார்கள். வீண் பழி சுமத்துகிறவர்களும், நரகம் அடைவார்கள். உண்மை வெளிப்படும். நீங்கள் அஞ்ச வேண்டா,” என்று கூறியருளினார்.
★★★
நகரத்துக்கு வெளியேயிருந்த கள்ளுக் கடையிலே வழக்கம் போலக் குடிகாரர்களின் ஆரவாரம் அதிகமாயிருந்தது. வெறியாட்டமும், கூச்சலும், ஏசலும், பிதற்றலும், பேச்சும் உச்ச நிலையில் இருந்தன. சுந்தரியின் கொலையைப் பற்றிய பேச்சும் அங்குப் பேசப்பட்டது.
“சுந்தரியைக் கொன்னுப்பூட்டாங்கடா. அவன்களை சும்மா விடரனா பார்,” என்று கூறி, ஒரு வெறியன் மார் தட்டி, மீசையை முறுக்கிக் கொண்டு, குடி மயக்கத்தில் நிற்க முடியாமல் தள்ளாடினான்.
அப்பொழுது இன்னொரு குடியன், “அடே, என்னடா சொன்னே! என்ன செய்வே நீ? கிட்ட வாடா. அவளே குத்தின மாதிரி, ஒரே குத்துலே, யம லோகம் அனுப்பிடுறேன்,” என்று சொல்லி, கத்தியால் குத்துவது போலக் கையை ஓங்கி, அவனைக் குத்த வந்தான். ஆனால், குடி மயக்கத்தினால் கீழே விழுந்தான். எழுந்திருக்க முடியாமல், உட்கார்ந்தபடியே மேலும் உளறினான். “டேய்! நான் யார் தெரியுமா? ஆம்பளேடா; சிங்கக் குட்டி!” என்று வீரம் பேசி, மீசையை முறுக்கினான்.