42
இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்
பௌத்தர்களுக்கு அடியோடு செல்வாக்கு இல்லாமல் போகும் என்று கருதிச் சுந்தரியைக் கொலை செய்யும்படி, ஏற்பாடு செய்தார்களாம். இந்தச் செய்தி புலனாய்வில் வெளியாயிற்று.
கொலை செய்யத் தூண்டியவர்களையும், கொலை செய்தவர்களையும் நகரத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துக் கொண்டு போய், இவர்கள் செய்த சூதுகளையும், புரட்டுகளையும் மக்களுக்கு வெளிப்படுத்தும்படி, அரசர் சேவகர்களுக்குக் கட்டளையிட்டார். அதன்படியே, அவர்கள் நகரமெங்கும் சுற்றிக் கொண்டு வரப்பட்டனர். பிறகு, அவர்கள் குற்றத்திற்குத் தக்கபடி, தண்டனையடைந்தனர்.
நகர மக்கள் உண்மை அறிந்த பிறகு, வியப்படைந்தார்கள். சுந்தரி வேண்டுமென்றே, பொய்ப் பழியைப் பரவச் செய்து, மக்களை நம்பச் செய்ததை எண்ணி, அவள் மேல் சினங்கொண்டார்கள். புத்த துறவிகளின் மேல் மக்கள் வீணாகப் பழிமொழி கூறி, வெறுத்தல் செய்ததை எண்ணி, மனம் வருந்தினார்கள். புத்த மதம் நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கு அடைந்து, சிறப்புப் பெறுவதைப் பொறாமல், வேறு மதத்துத் துறவிகள் வஞ்சனையாகச் செய்த சூது, வீண் பழி என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டார்கள்.
அன்று முதல், புத்த சமயத் துறவிகளிடம், மக்களுக்கு முன்பிருந்ததை விட நல்ல எண்ணமும், நன்மதிப்பும் ஏற்பட்டன. மக்கள் அன்பாகவும், ஆதரவாகவும் புத்தரைப் போற்றினார்கள்.