7. நச்சுப் பாம்பு
நள்ளிரவு; சிராவத்தி நகரத்தின் கோட்டை கதவுகள் மூடப்பட்டுச் சேவகர் கண்ணுறங்காமல், காவல் புரிகின்றனர். நகர மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கும் அமைதி. இந்த நள்ளிரவிலே, கள்ளர் சிலர் கோட்டைக்குள் புகுந்தார்கள். மதில் சுவரில் ஏறி, அவர்கள் உள்ளிறங்கவில்லை. நகரத்துக் கழிவு நீர், அகழியில் விழுகிற பெரிய சுருங்கை (சாக்கடை) வழியாகப் புகுந்து, கள்ளர்கள் நகரத்திற்குள்ளே நுழைந்தார்கள். காவல் சேவகர் கண்களிற் படாமல், அந்நகரத்துச் செல்வர் ஒருவரின் மாளிகையை அடைந்தார்கள். சுவரில் கன்னம் வைத்து, உள்ளே புகுந்து, பொற்காசுகளையும், தங்க நகைகளையும், மணி மாலை, முத்து மாலை முதலியவற்றையும் எடுத்து, மூட்டை கட்டிக் கொண்டு, மறுபடியும் சாக்கடை வழியே, அகழியில் இறங்கி, வெளியே போய் விட்டார்கள். போகும் கள்ளர்கள், நகரத்துக்கப்பால் உள்ள வயல்களின் வழியாக நடந்தார்கள். வைகறைப் போது ஆயிற்று. வயலில் ஒரு புறம் உட்கார்ந்து, களவாடிய பொருள்களைப் பங்கிடத் தொடங்கினார்கள்.
கள்ளர்கள், தாம் களவாடிய பொருள்களைப் பங்கிடுவதில் கண்ணுங் கருத்துமாயிருந்த போது, சற்றுத் தொலைவில் காலடிச் சத்தம் கேட்டது. “சுருக்காக நடங்கடா,” என்னும் குரலும் கேட்டது. கள்ளர்கள், அரச சேவகர்கள் தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்று