52
இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்
இல்லாத இடம். கதிரவன் மறைந்து விட்டான். கிச்சரக்கூட மலையின் அடிவாரத்திலே, இவர்கள் நடக்கிறார்கள். இருள் சூழ்கிறது. செவ்வானம் ஒளி மழுங்கிக் கொண்டிருக்கிறது. பறவைகள் மரங்களில், சந்தடியின்றி அடங்கி விட்டன. அமைதியான அந்த நேரத்திலே, மலையுச்சியிலே கடகடவென்று ஓர் அச்சமூட்டும் ஓலி கேட்கிறது. எல்லோரும் மலையுச்சியைப் பார்க்கிறார்கள். அந்தோ! கரிய பெரும் பாறை ஒன்று மலை மேலிருந்து உருண்டு வேகமாக வருகிறது. அது உருண்டு விழப் போகிற இடத்தில்தான் புத்தர் பெருமான் நடக்கிறார்! பாறை அவரை உருட்டி நசுக்கி விடுவது உறுதி. மலைச் சரிவிலே பாதி தூரம் பாறை உருண்டு வந்து விட்டது. ௮தைக் கண்ட மாணவர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. அடுத்த நொடிப் பொழுதில், பாறை புத்தர் மேல் உருண்டு விழப் போகிறது! மாணவர்கள் இமை கொட்டாமல் வாயடைத்து, மனம் துடித்து நிற்கிறார்கள்.
நல்ல வேளை! கடகடவென்றுருண்டு வந்த பாறை திடீரென்று இடை வழியிலே, மலைச் சரிவிலேயே நின்று விட்டது ஆனால், சிதறுண்ட சிறு கற்கள் வேகமாக உருண்டு வந்தன. அவற்றில் ஒரு கல், பெருமானின் காலில் பட்டது. காயம் பட்டுக் குருதி வடிகிறது. வலி பொறுக்க முடியாமல், அவர் தரையில் உட்கார்ந்தார். மாணவர்கள் ஓடித் தாங்கிக் கொள்கிறார்கள்.
விரைவாக உருண்டு வந்த பாறை, மலைச் சரிவிலே, தலை தூக்கி நின்ற இரண்டு பாறைகளுக்கு இடையிலே அகப்பட்டுக் கொண்டு, அங்கேயே தங்கி விட்டது;