.
9. கள்ளரை நல்லவராக்கிய காத்தியானி
பெருமான் புத்தருடைய சிறந்த மாணவர்களில் மகா கச்சானரும் ஒருவர். மகா கச்சானர் அவந்தி நாட்டிலே கூரராக நகரத்திலே சென்று, அந்நகரத்துக்கு அண்மையில் உள்ள ஒரு மலையின் மேல், தம்முடைய மாணவர்களுடன் தங்கியிருந்தார். அவர் நாள் தோறும் அறவுரை கூறி, விரிவுரை ஆற்றுவது வழக்கம். அவர் கூறும் நல்லுரைகளைக் கேட்பதற்காக, நகர மக்கள் அவரிடம் திரண்டு வந்தார்கள்.
மகா கச்சான மகாதேரர் அருளிச் செய்யும் அறவுரைகளை, நாள் தோறும் விடாமல் கேட்டு வந்தவர்களில் இளைஞன் ஒருவனும் இருந்தான். இவன் பெயர் சோணன் குட்டிக் கண்ணன் என்பது. செல்வம் கொழித்த குடும்பத்திலே பிறந்தவன். காத்தியானி என்னும் அம்மையாரின் மகன். முனிவரின் அறவுரைகளைக் கேட்டு வந்த இவனுக்குத் துறவியாக வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. ஆகவே, மகா கச்சான மகாதேரரிடம் சென்று, தான் துறவியாக விரும்புவதாகவும், தன்னை மாணவனாக ஏற்றுக் கொள்ளும்படியும் அவரிடம் கூறினான்.
செல்வஞ் செழித்த குடும்பத்திலே பிறந்து, சுக வாழ்க்கை வாழ்ந்து பழகிய அவனுடைய நிலையையும், இளமை வயதையும் அறிந்த மகா கச்சானர், அவன் வேண்டுகோளை மறுத்தார். உற்றார், உறவினரை விட்டுத் தனியே இருப்பதும், தன்னந்தனியே இரந்-