கள்ளரை நல்லவராக்கிய காத்தியானி
59
எண்ணத்தைத் தமது மகனான சோணன் குட்டிக் கண்ணருக்குத் தெரிவித்தார். அஃதாவது, தமக்கு அறவுரை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரும் அதற்கு உடன்பட்டார்.
அந்நகரத்தின் சிறந்த ஓர் இடத்திலே பலரும் வந்து அறவுரை கேட்பதற்குக் காத்தியானி அம்மையார் ஏற்பாடு செய்தார். சோணன் குட்டிக் கண்ணர் அந்த இடத்தில் சென்று, நாள் தோறும், அறவுரை கூறி, விரிவுரை வழங்கினார். மக்கள் திரண்டு வந்து கேட்டு மகிழ்ந்தார்கள். காத்தியானி அம்மையாரும், தமது மாளிகையில் உள்ள ஏவலாளர், பணிவிடையாளர் எல்லோரும் அறவுரை கேட்பதற்காக விடுமுறையளித்துத் தாமும் சென்று, அறவுரை கேட்டார். அவர் மாளிகையில் ஒரே ஒரு வேலைக்காரி மட்டும் தங்கியிருந்தாள்.
காத்தியானி அம்மையார் பெருஞ்செல்வம் உள்ள பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறினோமல்லவா? அக்காலத்தில், அந்த நகரத்திலே, கொள்ளையடிக்கும் கள்ளர் இருந்தனர். அவர்கள் காத்தியானி அம்மையார் வீட்டுச் செல்வத்தின் மேல், நெடுங்காலமாகக் கண் வைத்திருந்தார்கள். எப்போது சமயம் வாய்க்கும் என்று அவர்கள் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அம்மையார் வேலைக்காரர்களுடன் அறவுரை கேட்கும் செய்தியை அறிந்து, இதுவே தகுந்த சமயம் என்று கருதி, அம்மையார் வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றார்கள். கன்னம் வைத்து, வீட்டிற்குள்