60
இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்
புகுந்து பொருள்களையும், பணங்காசுகளையும் கொள்ளையிடத் தொடங்கினார்கள். கள்ளர் தலைவன், அம்மையார் அறவுரை கேட்கும் கூட்டத்திற்கு வந்து, ஒரு புறமாக இருந்து, அம்மையாரைக் கண்காணித்துக் கொண்டிருந்தான். தம் வீட்டைக் கள்ளர் கொள்ளையிடுவதை அறிந்து, அம்மையார் கள்ளரைப் பிடிக்க முயற்சி செய்தால், அப்போது அவரைக் கத்தியால் குத்திக் கொன்று விடுவதற்காகத்தான் கள்ளர் தலைவன் அங்குச் சென்றிருந்தான்.
வீட்டிற்குள் புகுந்த கள்ளர்கள், செம்பு நாணயங்கள் வைத்திருந்த அறைக்குள் புகுந்து, அவற்றை வாரி, மூட்டை கட்டினார்கள். கள்ளர் புகுந்து கொள்ளையிடுவதைக் கண்ட ஊழியப் பெண், அம்மையாரிடம் விரைந்து வந்து, செய்தியைச் சொன்னாள். இதனைக் கேட்ட அம்மையார், “நல்லது; அதைப் பற்றிக் கவலையில்லை,” என்று கூறிச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
வீட்டிற்குத் திரும்பிச் சென்ற ஊழியப் பெண், இப்போது கள்ளர் வெள்ளி நாணயங்கள் வைத்துள்ள அறையில் புகுந்து, வெள்ளிக் காசுகளை மூட்டை கட்டிக் கொண்டிருப்பதைக் கண்டாள். ஆத்திரங்கொண்டாள். ஆகவே, அவள் மறுபடியும் ஓடோடிச் சென்று, அம்மையாரிடத்தில் வெள்ளிக் காசுகள் பறி போவதைக் கூறினாள். அம்மையார், “சரி போகட்டும். அதைப் பற்றிக் கவலை வேண்டாம். நீ போ,” என்று கூறி, மீண்டும் சொற்பொழிவைக் கருத்தூன்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்.