உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்ளரை நல்லவராக்கிய காத்தியானி‌

61

மிக வருத்தத்தோடு வீடு திரும்பிய வேலைக்காரி, கள்ளர்கள்‌ வெள்ளிக் காசுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, அப்போது பொற்காசு உள்ள அறைக்குள்‌ புகுந்து, தங்க நாணயங்களை மூட்டை கட்டிக் கொண்‌டிருப்பதைக்‌ கண்டாள்‌. கண்டு மனம்‌ பதறி, மறுபடியும்‌ ஓடோடி வந்து, அம்மையாரிடம்‌ பொற்குவியல்‌ கொள்ளை போவதைக்‌ கூறினாள்‌. அப்போதும்‌, அம்மையார்‌ அறவுரையிலே கருத்தூன்றியிருந்தார்‌. அவர்‌ அவளைப்‌ பார்த்து, “போனால்‌ போகட்டும்‌. இப்போது தொல்லை செய்யாதே,” என்று கூறி, முன் போலவே, சொற்பொழிவைக்‌ கேட்டுக் கொண்டிருந்தார்‌.

ஊழியப் பெண்‌ அடிக்கடி ஓடி வந்து, அம்மையாரிடம்‌ கூறியதையும்‌, அம்மையார்‌ அவளிடம்‌ கூறியதையும்‌, கள்ளர்‌ தலைவன்‌ கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்‌. மூன்று தடவை வேலைக்காரி வந்து, செம்பு, வெள்ளி, பொன்‌ நாணயக்‌ குவியல்கள்‌ கொள்ளை போவதைக்‌ கூறிய போதும்‌, அம்மையார்‌ அதனைப்‌ பொருட்படுத்தாமல்‌, அறவுரையில்‌ கருத்‌தூன்றியிருந்ததைக்‌ கண்டு அவனுக்கு வியப்பு உண்டாயிற்று. அம்மையார் மீது அவனுக்குப்‌ பெருமதிப்பு உண்டாயிற்று. அவன்‌ உள்ளத்திலே, நல்லறிவு தோன்றியது. ‘இவ்வளவு நல்லவருடைய பொருளைக்‌ கொள்ளையடித்தால்‌, என்‌ தலை மேலே இடி விழும்! இவர்‌ பொருளைத்‌ தொடுவது பெரும் பாவம்‌!' என்று அவன்‌ தனக்குள்‌ கூறிக் கொண்டான்‌. உடனே, அவன்‌ அவ்விடத்தை விட்டு விரைந்து நடந்தான்‌. அம்மையார் வீட்டையடைந்தான்‌.