62
இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்
கள்ளர்கள் அப்போது, கொள்ளையடித்த பொருள்களை மூட்டை கட்டி, அவற்றை வண்டிகளில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். மூட்டைகளை இறக்கி, வீட்டிற்குள்ளேயே வைத்து விடும்படி அவன் அவர்களுக்குச் சொன்னான். அதைக் கேட்ட அவர்கள் வியப்படைந்தார்கள். ஆனால், ஒன்றும் பேசாமல், தம் தலைவன் கட்டளைப்படியே மூட்டைகளை வீட்டிற்குள் கொண்டு போய் வைத்தார்கள். மூட்டைகளை இறக்கியானவுடன், அவர்களை அழைத்துக் கொண்டு, அம்மையார் இருந்த கூட்டத்திற்கு வந்தான். வந்து, ஒருபுறமாக அமர்ந்து அறவுரைகளைக் கேட்டான்.
சொற்பொழிவு முடிந்தது. எல்லோரும் எழுந்து சென்றனர். காத்தியானி அம்மையாரும், தமது இல்லத்திற்குப் புறப்பட்டார். கள்வர் தலைவன் அம்மையார் எதிரில் சென்று, அவரை வணங்கிக் கும்பிட்டான். தான் அம்மையார் வீட்டில் கொள்ளையடித்ததையும், அதை அறிந்தும், அம்மையார் அதைப் பொருட்படுத்தாமல், அறவுரையிலேயே மனம் செலுத்தியிருந்ததையும் சொல்லி, இவ்வளவு நல்லவருடைய செல்வத்தைக் கொள்ளையிடத் துணிந்ததற்காகத் தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டான். அம்மையார் மன்னித்தார்.
கள்ளர் தலைவன் அம்மையாரை விடவில்லை. “நான் துறவிகள் மன்றத்தில் சேரப் போகிறேன். இன்றோடு என் கொள்ளைத் தொழிலை விட்டு விட்டேன். இவ்வாழ்க்கையில் இனி எனக்கு அவாவில்லை. துறவு பூண்டு, மிகுந்திருக்கும் வாழ்நாளை, நல்வழியில் செலுத்த