பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துரு

173

பிடிக்கக் கூடிய பாஸ்வரம் கலந்த கலவை பெட்டியின் இருபுறமும் தடவப்படும். அதன் பின் முழுமையான வடிவில் தீப்பெட்டி விற்பனைக்கு அனுப்பப்படும். தற்போது மரக் குச்சிகளுக்குப் பதிலாக மெழுகு பூசிய பேப்பர் குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன . நம் நாட்டில் தீப்பெட்டித் தொழில் பெரும்பாலும் குடிசைத் தொழிலாகவே நடைபெற்று வருகிறது.


துத்தநாகம் : இது ஆங்கிலத்தில் ஜின்ங்க் (Zine) என அழைக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இதனை ‘யசெடா’ (Yasada) என்று அழைப்பர். இவ்வுலோகம் தனித்த நிலையில் கிடைப்பதில்லை. சேர்ம நிலையில் கிடைக்கிறது. பண்டைக் காலம் தொட்டெ மக்களறிந்து பயன்படுத்தி வரும் உலோகம் துத்தநாகமாகும். நீல வெண்மை நிறமுடைய படிக வடிவிலான துத்தநாகம் ஒரு தனிமம் ஆகும்.

துருப்பிடிக்காத தன்மை கொண்ட துத்தநாகம் வெப்பத்தையும் மின்சாரத்தையும் மிக எளிதாகக் கடத்தும். இவ்வுலோகத்தை 1200 முதல் 1500 வெப்பத்தில் தகடாகவோ கம்பியாகவோ அடித்து நீட்டமுடியும், இதை மிகுந்த வெப்பநிலையில் 10000 வெப்பத்தில் சூடாக்கினால் இது காற்றில் எரிந்து துத்தநாக ஆக்சைடாக மாறும்.

துத்தநாகம் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. காரியக் கனிமமான வலினா கலந்ததாக கந்தகக் கல் வடிவில் கிடைக்கிறது. முற்காலத்தில் எரிந்தும் சுட்டும் இவ்வுலோகத்தைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இக்காலத்தில் மின் பகுப்பு முறையில் எளிதாகத் துத்தநாகத்தைப் பிரித்தெடுக்கிறார்கள். துத்தநாகம் இந்தியாவிலும் பிற உலக நாடுகளிலும் கிடைக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, கனடா நாடுகளில் மிகுதியாகக் கிடைக்கிறது.

இவ்வுலோகத்திற்குத் துருப்பிடிக்கும் தன்மை இல்லாததால் துருப்பிடிக்கக் கூடிய இரும்பு, எஃகு போன்ற உலோகங்களின்மீது மேல் பூச்சாகப் பூசப்படுகிறது. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் இரும்பாலான வாளிகள், தொட்டிகள், இரும்பாலான வீட்டுக் கூரைத் தகடுகள், மண்ணுக்கடியில் புதைக்கக்கூடிய குழாய்கள் இவை அனைத்துமே துத்தநாகப் பூச்சால் ஆனவைகளேயாகும். துத்தநாகப் பூச்சால் இப்பொருட்கள் மேலும் உறுதி பெறுகின்றன.

துத்தநகம் நச்சுத் தன்மைகொண்ட உலோகமாகும். துத்தநாகம் பூசப்பட்ட பாத்திரங்களில் உணவுப் பொருட்களை வைத்து உண்ணக்கூடாது. நாணயத் தயாரிப்பிற்கும் துத்தநாகம் பயன்படுகிறது. பட அச்சுக் கட்டைகள் தயாரிக்கவும் பசை மின்கலக் கூடுகள் தயாரிக்கவும் துத்தநாகம் பயன்படுகிறது.

துத்தநாகமும் செம்பும் சேர்ந்த கலவையைக் கொன்டு உருவாக்கப்படும் கலவையே பித்தளை.


துரு : ஈரமான இடங்களில் உள்ள இரும்பு போன்ற உலோகப் பொருட்கள் மீது பழுப்பு நிறத் துகள்கள் இருப்பதை அடிக்கடி காணலாம். இதுவே துரு என அழைக்கப்படுகிறது. காற்றிலுள்ள பிராணவாயுவும் ஈரமும் இணைந்து இரும்பு மீது வினைபுரிந்து துருவை உருவாக்குகின்றன. துரு உருவாக சில நாட்களாகும். தொடர்ந்து துரு ஏற்படுவதன் மூலம் பொருள் அரிப்புக்கு ஆளாகும். இரும்பின் மீது தண்ணீரோ அல்லது பிராண வாயுவோ தனியே படும்போது துரு உருவாவதில்லை. இவை இரண்டும் இணைந்த நிலையில் இரும்பில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதன் மூலமே துரு ஏற்படுகிறது. நீரினுள் இருக்கும் இரும்புக்குழாய்கள் மெதுவாகத் துருப்பிடிப்பதற்குக் காரணம் அந்நீரினுள் கரைந்திருக்கும் வாயுக்களேயாகும்.

சில உலோகங்களில் துரு ஏறுவதில்லை. அவற்றுள் முக்கியமான உலோகங்கள் துத்தநாகம், குரேமியம், வெள்ளியமாகும். இவற்றை இரும்பு போன்ற உலோகப் பொருட்கள் மீது பூசிவிட்டால் அவை துருவால் பாதிக்கப்படுவதில்லை.

இரும்புப் பெட்டி போன்றவற்றிற்கு வண்ணப்பூச்சு பூசுவதன் மூலம் துருப்பிடிக்காமல் காக்க இயலும். எண்ணெய்ப்பூச்சு மூலமும் துரு ஏறாமல் தடுக்க முடியும். துருக்கறைகள் துணிகளின் மேல்பட்டால் விரைவில் கறை பட்ட துணிப்பகுதி இற்று கிழிந்துவிடும். துருக் கலந்த உணவை உட்கொள்ள நேரிட்டால் உடலுக்குப் பாதிப்பு ஏற்படும்.

எனவே, துருவினால் ஏற்படும் பொருள் இரண்டாம் நிலைப் பொருளாகும் (Secondary Product). இது புறப்பரப்பில் ஒட்டாது.