பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

நச்சுத் தாவரங்கள்

சத்து, சிஸ்டின் பாஸ்போலிப்பிட்ஸ், சல்பர் போன்ற பல சத்துக்கள் தேவை.

நகம் ஒரு நோய் காட்டும் கண்ணாடி. நகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது மஞ்சள் காமாலைக்கு அறிகுறி. அது வெளிறிப் போயிருந்தால் இரத்த சோகையைக் குறிக்கும். வெண்புள்ளிகள் தெரிந்தால் கால்சியம் சத்துக் குறைவு எனக் கொள்ள வேண்டும். உடம்பில் காசநோயும் கல்லீரல் நோயும் இருந்தால் நகம் நத்தைக் கூடு மாதிரி பெரிதாக வீங்கிக் கொள்ளும். நகம் சொத்தையாகக் காணப்பட்டால் பூஞ்சைக் காளான் உள்ளது என அறியலாம். நகம் நீல நிறத்தில் இருந்தால் இரத்தத்தில் பிராணவாயு (oxygen) குறைந்துள்ளது என்று கொள்ள வேண்டும். நகம் ஆண்டுக்கு சுமார் 8 செ.மீ. நீளம் வளரும். இஃது எளிதில் தேய்வதில்லை. எனவே நகத்தை நாம் அடிக்கடி வெட்டிவிடுதல் நல்லது. ஏனெனில் நகத்தின் அடியில் சேரும் அழுக்கு உணவு உண்ணும்போது உணவோடு கலந்து உட்சென்று தீங்கிழைக்கும். அழகுக்காக சிலர் நகங்களை நீளமாக வளர்த்து வண்ணந் தீட்டி வனப்பூட்டுவர்.

நம்மைப் போலவே பறவைகளுக்கும் பிற விலங்குகளுக்கும் நகங்கள் உண்டு. இவை நம் நகங்களை விட கூர்மையாக இருக்கும். சற்று வளைந்திருக்கும், பூனை, புலி, சிங்கம்போன்ற விலங்குகள் நகங்களை வேண்டியபோது பாதத்தின் உட்புறமாக இழுத்துக்கொள்ள இயலும். தேவையானபோது வெளியே நீட்டி இரையை இறுகப் பிடிப்பதற்கும் தாக்கித் தன்னைக் காத்துக் கொள்ளவும் செய்யவும்.

மாடு, குதிரையின் நகங்கள் குளம்பு வடிவில் இருக்கும். இவை ஓடும்போது குளம்பு தேயாமலிருக்க இவற்றை 'லாடம்’ எனும் இரும்பு வளையத்தை ஆணி கொண்டு அடித்துப் பயன்படுத்துவர். யானையின் நகங்கள் மிகப் பெரிதாகக் காலில் அமைந்திருக்கும்.


நச்சுக்கொல்லி : உடலில் நோயைத் தோற்றுவிக்கும் நச்சுக்கிருமிகளைக் கொல்லும் குணமுள்ள பொருட்கள் நச்சுக் கொல்லிகள் என அழைக்கப்படுகின்றன. இயற்கை நச்சுக் கொல்லிகளாக சூரியக்கதிர்களும் உப்பும் சர்க்கரையும் அமைந்துள்ளன.

முதன்முதலில் உடலில் நோயை உண்டு பண்ணுபவை ஒருவித நச்சுக் கிருமிகளே என்பதை பாஸ்டர் எனும் ஃபிரெஞ்சு விஞ்ஞானி 1860ஆம் ஆண்டில் கண்டறிந்தார். உடலில் ஏற்படும் காயங்களில் சீழ்பிடிக்கக் காரணம் காயங்களில் கிருமிகள் சேர்ந்து பெருகுவதேயாகும் என்பதை 1868 ஆம் ஆண்டில் லிஸ்டர் எனும் இங்கிலாந்து அறிவியல் ஆய்வறிஞர் கண்டுபிடித்தார். இத்தகைய தீங்கு தரும் நச்சுக்கிருமிகளைக் கொல்ல பல புதிய நச்சுக்கொல்லி மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவற்றுள் கார்பாலிக் அமிலம், டிங்க்சர் அயோடின், ஹைட்ரஜன் பராக்சைடு, போரிக் அமிலம், பொட்டாசியம் பர்மாங்கனேட் முதலியவை முக்கிய மருந்துகளாகும். இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் இருக்கும் நச்சுக்கிருமிகளைக் கொல்வதோடு புதிய கிருமிகள் மேலும் தொற்றாமலும் தடுக்கப்படுகின்றன.


நச்சுத் தாவரங்கள் : உலகில் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கு மேற்பட்ட தாவர வகைகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள். இவற்றுள் ஒரு சில தவிர மற்றவை மனிதர்களுக்குப் பயன்படுபவை அல்லது தீங்கு ஏதும் தராதவைகளாகும். நச்சுத்தன்மை கொண்ட ஒரு சில தாவரங்களிலும் இரு வகை உண்டு. ஒரு வகைத் தாவரங்கள் தொட்டாலே தீங்கிழைக்கும். உதாரணமாக செந்தட்டி எனும் தாவரத்தைத் தொட்டால், தொட்ட இடமெல்லாம் அரிக்கும்; தடிப்புகள் உண்டாகும். இதற்குக் காரணம் செந்தட்டிச் செடியின் இலைகளில் மயிரிழை போன்ற நுண் இழைகள் உண்டு. இவை நச்சுத் தன்மையுள்ளவைகளாகும். இவை உடலில் குத்தியவுடன் நச்சுத் தன்மை உடலுள் பாய்ந்து அரிப்பையும் தடிப்பையும் ஏற்படுத்துகின்றன. சதுரக் கள்ளி போன்றவற்றின் பால் நச்சுத் தன்மையுள்ளதாகும்.

மற்றொருவகை தாவரங்கள் உடலுக்குள் சென்று நீக்கிழைப்பவையாகும். இத்தாவரங்களை மனிதர்களோ அல்லது ஆடு, மாடு போன்ற பிராணிகளோ தெரிந்தோ தெரியாமலோ உண்ண நேர்ந்தால் அவற்றின் நச்சுத் தன்மையால் உயிரையே இழக்க நேரிடும். ஊமத்தைச் செடியின் காய், எட்டி மர விதைகள் போன்ற தாவரப் பொருட்கள் கொடிய நச்சுத் தன்மை கொண்டவைகளாகும்.

சிலவகை நச்சுத் தாவரங்களின் வேர்களும் கிழங்குகளும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. கலப்பைக் கிழங்கு போன்ற நச்சுத் தன்மை கொண்ட தாவரப் பொருட்களிலிருந்து நோய் போக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.