பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாக்கு

183

நச்சுத் தாவரங்கள் ஒவ்வொன்றின் நச்சுத் தன்மை ஒரே மாதிரி அமைந்திருக்கவில்லை. சில மிதமான நச்சுத்தன்மையுள்ளவை. வேறு சில கொடிய நச்சுக் குணம் கொண்டவை. சில தாவரங்கள் இளஞ் செடியாக இருக்கும்போது உள்ள நச்சுத் தன்மையின் கடுமை, அது வளர்ந்து மரமான பின்னர் இருப்பதில்லை.

தாவர நச்சுத் தன்மையினால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது கால்நடைகளேயாகும்.


நட்சத்திரம் : வானில் இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் மினுக் மினுக்கென்று மின்னுவதைப் பார்த்திருக்கிறோம். இவைகள் அனைத்தும் கோளங்களாகும். சூரியனும் ஒரு நட்சத்திரக் கோளமேயாகும். சூரியன் உலகுக்கு அருகே உள்ளதால் சற்றுப் பெரிதாகத் தோன்றுகிறது. மற்ற நட்சத்திரக் கோளங்கள் நெடுந்தொலைவுக்கப்பால் உள்ளதால் அவை சிறியனவாகத் தோன்றுகிறன.

சூரியனும் நட்சத்திரங்களும் தாமாகவே ஒளி வீசித் திகழ்பவைகளாகும். இவற்றுள் சில நட்சத்திரங்களின் ஒளி மங்கலாகும். இவற்றுள் சிலவற்றின் ஒளி மிகப் பிரகாசமாகும். நட்சத்திரங்களுக்கும் சில பெரியனவாகவும் சில சிறியனவாகவும் அமைந்துள்ளன. சூரியனுக்கு அடுத்தபடியாக அதிக ஒலியுள்ள நட்சத்திரம் 'சிரியஸ்’ எனும் நட்சத்திரமாகும். இது சூரியனைக் காட்டிலும் இருபது மடங்கு அதிக ஒளியுள்ளதாகும். அளவிலும் சூரியனைவிடப் பெரியதாகும்.

நட்சத்திரங்கள் நெடுந்தொலைவுக்கப்பால் உள்ளதால் இவற்றை ஆற்றல் மிக்க தொலை நோக்கி மூலமே காணமுடியும். நட்சத்திரங்களிலிருந்து வீசும் ஒளியின் தன்மையை துணுகி ஆய்ந்து நட்சத்திரங்களில் உள்ள ஹீலியம், கால்சியம், இரும்பு போன்ற மூலப் பொருட்களைக் கண்டறிந்துள்ளனர். பூமியில் காணப்படும் தனிமங்களில் பெரும்பாலானவை நட்சத்திரங்களிலும் உள்ளன என இவ்வாய்வுகள் புலப்படுத்தியுள்ளன. ஆனால், வெப்ப மிகுதியால் இத்தனிமங்கள் அனைத்தும் வாயு வடிவிலேயே காணப்படுகின்றன.

நட்சத்திரங்கள் மிகுந்த வெப்பமுடையனவாகும். இவைகள் 5,0000 முதல் 88,0000 வரையில் வெப்ப முடையனவாகும். இவற்றில் காணும் வெப்பத்தைப் பொறுத்து இவை மஞ்சள், சிவப்பு, நீலம், ஆரஞ்சு வண்ண முடையவைகளாக அமைந்துள்ளன. இவை நெடுந்தொலைவுக்கப்பால் இருப்பதால் இவற்றின் வெப்பம் நம்மை எட்டுவதில்லை. சூரியனாகிய நட்சத்திரம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதன் வெப்பம் எளிதாக பூமியை வந்தடைகிறது. நம்மாலும் வெப்பத்தை உணர முடிகிறது.

பண்டு தொட்டே நட்சத்திரங்களைக் கூட்டம் கூட்டமாகப் பகுத்துப் பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் நட்சத்திரக் கூட்ட உருவமைப்புக் கேற்ப ரிஷபம் (மாடு), விருச்சிகம் (தேள்), துலாம் (தராசு) என்றெல்லாம் பெயரிட்டு அழைத்து வந்தனர். நட்சத்திரக் கூட்டங்களிலேயே மிகப் பெரியது ‘சப்தரிஷி மண்டலம்' ஆகும். சூரியனையும் அதைச்சுற்றி பூமி, சந்திரன் போன்ற கிரகங்களையும் கொண்ட பகுதி 'ஆகாய கங்கை’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதுவும் நட்சத்திரக் கூட்டமாகவே கருதப்படுகிறது.


நாக்கு : நாம் உண்ணும் உணவை பற்களுக்கிடையே நன்கு சுழற்றித் தந்தும், நம் விருப்பத்திற்கேற்ப ஒலிகளை எழுப்பி நன்கு பேசவும் உதவும் உறுப்பு நாக்கு ஆகும். நாக்கின் இயக்கம் நம் உடல் இயக்கத்தின் இன்றியமையாத அங்கமாகும்.

நம் உடலில் என்ன நோய் ஏற்பட்டாலும் அதன் அறிகுறி நாக்கில் பல்வேறு நிறங்களாகப் படிகின்றன. என்ன நோய் என்பதையும் நோயின் தன்மையையும் அதில் ஏற்பட்டுள்ள நிற வேறுபாட்டைக் கொண்டே மருத்துவர் எளிதாகக் கண்டறிகிறார்.

நாக்கு முழுக்க முழுக்க தசைநார்களால் ஆனதாகும். நாக்கின் அடிப்பகுதி எலும் போடு இணைந்துள்ளது. நாக்கில் எலும்பு ஏதும் இல்லாததால் அதை எளிதாக நீட்ட, அளைக்க, மேல்நோக்கி அன்னத்தை அழுத்த முடிகிறது. நாக்கின் மேல் தசை எப்போதும் ஈரமாகவே இருக்கும். காரணம் இதன்மீது ஒருவித வழுவழுப்பான நீர் சுரந்து கொண்டே யிருப்பதாகும். நாவின் இருபுறமிருந்தும் உமிழ்நீர் சுரந்து கொண்டேயிருக்கிறது.

உணவுப் பொருட்களின் சுவையுணர்திறன் நாக்குக்கு மட்டுமே உண்டு. நாக்கின் நாற்புற ஓரங்களிலும் சுவையறியும் திறன் கொண்ட அரும்புகள் சுமார் 9000 எண்ணிக்கையில் உள்ளன. இவை 'சுவை அரும்புகள்’ (Taste