பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரப்பர்

259

படுத்தும் உலோகம் ஆகும். பீங்கான் பாத்திரங்களுக்கு நிறமூட்டுவதற்கு அம்மோனியம் யுரேனேட் எனும் சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.


யூக்ளிடு : வடிவ கணிதத் தந்தை’ எனப் போற்றப்படும் யூக்ளிடு கிரேக்க நாட்டுக் கணிதவியல் மேதையாவார். இவர் கி.மு. 800ஆம் ஆண்டில் எகிப்து நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியா நகரில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார் என்ற குறிப்பைத் தவிர வேறு வாழ்க்கை விவரங்கள் ஏதும் தெரியவில்லை.

வடிவ கணித மேதை யூக்ஸிடு

யூக்ளிடு கணிதம் சம்பந்தமாக எழுதிய பல நூல்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேலாகக் கணிதப் பாட நூல்களாக பயன்பட்டு வந்துள்ளன. இவரது கணித நூல்கள் இன்றும் கணிதவியல் அறிஞர்களால் போற்றப்படுகின்றன.

இவர் எழுதிய கணிதவியல் நூல்களுள் மிகச் சிறந்ததாகப் பாராட்டப்படுவது ‘அடிப்படைக் கோட்பாடுகள்’ (Elements) எனும் நூலாகும். கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இந்நூல் அரபு, லத்தீன் மொழி பெயர்ப்புகள் மூலம் உலக மொழிகள் பலவற்றில் பெயர்க்கப்படலாயின. இந்நூல் வடிவ கணிதத்தின் தோற்றத்தையும் எண்கள் பற்றிய கொள்கைகளையும் சிறப்பாக விளக்குகிறது.

ஐரோப்பாவில் அறிவியல் துரித வளர்ச்சிபெற அடிப்படைத் தூண்டுகோலாக அமைந்ததில் யூக்ளிடின் கணிதவியல் கோட்பாடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.


இது 'ஹேவேயா’ எனும் ஒருவகை மரத்திலிருந்து எடுக்கப்படும் பாலாகும். ஹேவேயா ரப்பர் மரம் இயற்கையைப் போன்றே பழைமைமிக்கதாகும்.இம்மரம்மூன்று இலட்சம் ஆண்டுகட்கு முன்பிருந்தே பூமியில் இருந்து வருவதாகக் கண்டறிந்துள்ளனர். பழைமைமிக்க நாகரிக இனமக்களான இன்காகளும், மாயர்களும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே ரப்பர் பந்துகளைப் பயன்படுத்தி வந்ததாக இவ்வின மக்கள் வாழ்ந்த இடிபாடுகளிலிருந்தும் புதைபடிவங்களிலிருந்தும் கண்டறிந்துள்ளார்கள்.

கொலம்பஸ் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றபோது ஹைத்தி மக்கள் ஒருவகை மரப் பிசினிலிருந்து செய்யப்பட்ட பந்தை வைத்துக்கொண்டு விளையாடுவதைக் கண்டார். அதற்கும் முன்னதாகவே தென் கிழக்காசியாவில் மரச்சாற்றிலிருந்து பந்தையும் கூடை, நீர்ச்சாடி ஆகியவற்றையும் செய்து பயன்படுத்தி வந்தனர். இப்பொருட்கள் அனைத்துமே ரப்பர் பாலிலிருந்து உருவானவை தாம்.

ரப்பர் ஒட்டும் தன்மையும் நெகிழ்வுத் தன்மையும் உள்ள மரப் பாலிலிருந்து கெட்டிப் படுத்தப்படும் பொருளாகும். இது ரப்பர் மரத்திலிருந்து எடுக்கப்படும் திரவமாகும். இந்த ரப்பர் பால் திரவத்தில் ஒரு சதவிகிதம் மட்டுமே ரப்பர் உள்ளது. மீதமுள்ளவை நீராகும்.

இயற்கையில் கிடைக்கும் ரப்பர் 'ஐஸோ பிரின்' (Isoprene) எனப்படும் சிறிய கரிம மூலக்கூறின் பல்படிச் சேர்மமாகும். இதன் மூலக்கூறு எடை 800,000. இயற்கையில் கிடைக்கும் ரப்பரின் பண்புகளை மாற்ற சல்ஃபருடன் சேர்த்து வெப்பப்படுத்தப்படுகிறது.

ரப்பரைக் கொண்டு பென்சில் எழுத்தை எளிதாக அழிக்க முடியும் என்பதை முதன் முதலாக பிரீஸ்ட்லி எனும் அறிவியல் அறிஞர் கண்டறிந்தார். பின்னர் 1828ஆம் ஆண்டில்தான் ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் மாக்குண்டோஷ் என்பார் ரப்பரைக் கொண்டு மழைக்கோட்டு உருவாக்கினார். இதன் பிறகே இதன் உபயோகம் உலகத்திற்குத் தெரிய வந்தது.