பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

இஸ்லாத்தை ஆதரித்த முதல் கிருஸ்தவ மன்னர் என்ற பெருமையைப் பெற்றவர் அபிசீனிய மன்னரே என்பது வரலாறு தரும் செய்தியாகும்.

மாதா கோயில் மண்டபம் கட்டிய கலீஃபா

1978ஆம் ஆண்டு அக்டோபர் பதினைந்தாம் நாளன்று ரோம் நகரில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்தேன். உலகத் கத்தோலிக்கத் தலைமை போப் இருக்கும் வாட்டிகன் நகரம் அங்குதான் உள்ளது. லண்டனிலிருந்து ரோம் வந்த என்னை அழைத்துச் செல்ல வந்திருந்த அருட்தந்தை ஆண்டனி வாட்டிகனைச் சேர்ந்த பாதிரியார். ரோம் விமான தளத்திலிருந்து நகரை நோக்கிக் காரில் சென்று கொண்டிருக்கும்போது பழங்கால மாதா கோயில் ஒன்றைக் காட்டினார். மிகப் பெரும் தூண்களோடு கூடிய மாபெரும் மண்டபத்தைக் கொண்ட மாதா கோயில் அது. சட்டென்று என்னை நோக்கி “இம் மாபெரும் மாதா கோயில் மண்டபத்தைக் கட்டியது யார் தெரியுமா?” எனக் கேட்டவர், என் பதிலுக்குக் காத்திராமல் தொடர்ந்து, “அது உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்” என்றும் அழுத்தந்திருத்தமாகக் கூறி நிறுத்தினார். என் குடும்பத்தவர் கட்டியிருந்தால் கட்டாயம் எனக்குத் தெரிந்திருக்க நியாயமுண்டு. ஆனால் என் குடும்பத்திலிருந்து ரோமில் காலடி எடுத்துவைக்கும் முதல் நபரே நான்தான். எனவே, தெரியாது என்பதைப் புலப்படுத்த பக்கவாட்டில் தலையை ஆட்டினேன்.

“நீங்கள் ஒரு முஸ்லிம் என்ற முறையில் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய வரலாற்றுச் சிறப்புள்ள செய்தி அது” என்று பூடகமாகக் கூறி என் முகத்தை நோக்கி மர்மப் புன்னகை பூத்தார்.