பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

ஆதிக்கப் போக்கிற்கு, மதங்களைப் பகடையாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதே உண்மை”

(தி டைம்ஸ் ஆஃப் இண்டியா இதழில் பி.என்.பாண்டே)

ஜிஹாதின் பெயரில் அரசியல் மோசடி

எங்காவது முஸ்லிம் மன்னர்கள் ஒரு நாட்டை ஆக்கிரமிக்கவோ அல்லது ஆளும் பகுதியை விஸ்தரிக்கவோ படையெடுப்பு நிகழ்த்தினால் அதை ‘இஸ்லாமிய ஜிஹாது’ எனக் குறிப்பிடுவது மிக மோசமான மோசடியாகும். முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய பல தவறான கருத்துகள் பரப்பப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று ‘ஜிஹாது’ என்பதுமாகும். முஸ்லிம் அல்லாதவர்களிடையே மட்டுமல்ல முஸ்லிம்களிடையிலும் இஸ்லாமிய நெறியின் அடிப்படை உண்மைகளை உணர்ந்து தெளியாநிலை இருந்து வருவதை மறுப்பதற்கில்லை.

சுருங்கச் சொன்னால் இஸ்லாத்தைப் பற்றிய மிகத் தவறான பிரச்சாரத்துக்கு ‘ஜிஹாது’ என்ற சொல் பயன் படுத்தப்பட்டு வருகிறது. எங்காவது முஸ்லிமிகளிடையே தீவிரத் தன்மை தலைதூக்கினால் அதை ‘ஜிஹாது’ என்ற சொல்லால் குறிப்பிடுவது இன்று வழக்கமாகி விட்டது. தீவிரவாதத்துக்கும் சாந்தி சமாதான மார்க்கமான இஸ்லாத்துக்கும் தொடர்பே இல்லை என்பது மிகத் தெளிவான உண்மை.

ஜிஹாதின் உண்மைப் பொருள் என்ன?

ஒரு முஸ்லிம் மேற்கொள்ளும் ஜிஹாதுவினுடைய நோக்கம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை “வ ஜாஹிது ஃபீஸபீலிஹி” என்ற சொற்றொடர் மிகத் தெளிவாகக் கூறுகிறது. இதற்கு ‘அல்லாஹ்வின் வழியில் ஜிஹாது செய்யுங்கள்’ என்பது பொருளாகும்.