பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தண்டத் தீர்வை போன்று வசூலிக்கப்பட்ட வரி என்ற மனப் பிரமையே ஆங்கில எழுத்தாளர்களாலும் இஸ்லாமிய விரோதப் போக்குள்ளவர்களாலும் இதுவரை ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளது.

அவர்கள் கருதுவதுபோல் ‘ஜிஸ்யா’ என்பது முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து கட்டாயமாக வசூலிக்கும் தண்டத் தீர்வையோ அல்லது அபராதத் தொகையோ அன்று. பின், ஏன் இந்தத் தனி வரி?

இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்களால் கொடுக்கப்பட்டு வந்த சிறு வரியே இது. இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாத பிற சமயக் குடிமக்கள் போர்ப் படைகளில் சேருவதினின்றும் விலக்குப் பெறும் பொருட்டும், சமுதாய வாழ்வில் தம் உயிர் உடைமைகளுக்கு முழுப் பாதுகாப்புப் பெறும் பொருட்டும் அரசுக்கு இச்சிறு வரியைச் செலுத்தி வந்தனர்.

மன்னரின் ஆட்சியின்கீழ் வாழும் அனைத்து இன, சமய மக்களும் இராணுவத்திலும் பிற சமுதாயப் பணியிலும் தேவைப்படும்போது இணைந்து நின்று சேவையாற்ற வேண்டியது ‘குடிமக்கள்’ என்ற முறையில் அனைவரின் இன்றியமையாக் கடமையாகும் என்பது எல்லோரும் ஒப்ப முடிந்த உண்மையாகும்.

ஆனால், இஸ்லாமிய ஆட்சியில் போர்ப்படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது கட்டாய விதியாகும். ஆனால், இவ்விதி முஸ்லிமல்லாதவர்கட்குக் கட்டாயமில்லை. விரும்புபவர் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றாலாம். விரும்பாதவர் ‘ஜிஸ்யா’ எனும் மிகச் சிறு தொகையை வரியாகச் செலுத்தியிருந்தால் அவர்கள் முழு அளவில் விலக்குப் பெறலாம். இவ்வாறு வசூலிக்கப்படும் ‘ஜிஸ்யா’ வரி முழுக்க சமுதாய நலப் பணிக்காக மட்டுமே