பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

199


கலீஃபாவாக இருந்த அலி (ரலி) நினைத்திருந்தால் அக் கிருஸ்தவரிடமிருந்து அக்கவசத்தை எளிதாகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பறிமுதல் செய்து திரும்பப் பெற்றிருக்க முடியும். அவ்வாறு செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. யாராக இருந்தாலும் வழக்கு மன்றம் மூலம்தான் பெற வேண்டும் என்பதால், தனது இரும்புக் கவசம் கூஃபா கிருஸ்தவரிடம் இருப்பதாகவும் முறைப்படி நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்குத் தொடுத்தார் அலி (ரலி) அவர்கள்.

நீதிபதி ஷுரஹ் பின் ஹாரிஸ் என்பவர் வழக்கை விசாரித்தார். நாட்டின் நான்காவது கலீஃபாவான அலி (ரலி) அவர்கள் ஒரு சாதாரண குடிமகன் போல் வழக்கு மன்றம் வந்து, கிருஸ்தவரிடம் இருக்கும் கவசம் தன் உடைமை என்றும் அதனைப் பெற்றுத் தருமாறும் நீதிபதியை வேண்டினார். அந்தக் கவசம் தன்னுடையது தான் என்பதை நிரூபிக்க தன் மகனை சாட்சிக்கழைத்தார். தந்தை வழக்கில் தனயன் சாட்சி ஏற்கப்பட மாட்டாது எனக் கூறி வழக்கை முற்றாகத் தள்ளுபடி செய்துவிட்டார் நீதிபதி ஷுரஹ் பின் ஹாரிஸ்.

நாட்டின் தலைமைப் பொறுப்பில், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கலீஃபாவே சாதாரண குடிமகனாக வழக்கு மன்றம் வந்து முறையிட்டதையும் மகன் சாட்சியம் செல்லாது என்பதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையும் அறிந்த அக்கிருஸ்தவர் மிகவும் மனம் நெகிழ்ந்து போய் விட்டார். இஸ்லாமியராயினும் மாற்றுச் சமயத்தவராயினும் எல்லோரும் மனிதர்கள் என்ற நிலையில் சமநீதி வழங்கும் இஸ்லாமிய சட்டத்தின் தகைமை அவரது மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவே, அவராகவே முன் வந்து தன்னிடமிருக்கும் இரும்புக் கவசம் அலியாருடையதே என ஒப்புக் கொண்டார். கவசத்தையும்