பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

அலி (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார். இவ்வாறு இஸ்லாமியராக இருந்தாலும் அல்லது மாற்றுச் சமயத்தவர்களாக இருந்தாலும் நீதியின் முன் சமமாகவே நடத்தப் பட்டார்கள்.

அரசியேயாயினும் தண்டனையிலிருந்து
தப்பவே முடியாது

கலீஃபாக்களின் ஆட்சியில்தான் இந்நிலை என்பதில்லை. இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியின் போதும் இஸ்லாத்தின் இதே சமநீதி முறைதான் மிகுந்த கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட்டு, சமூக நீதி-சமநீதி நிலை நாட்டப்பட்டது என்பதற்கு எத்தனையோ சான்றுகளைக் காட்ட முடியும்.

மன்னர் ஜஹாங்கீரின் ஆட்சிக்காலம். அவரது அன்பு மனைவி நூர்ஜஹான் அறிவுக் கூர்மை மிக்கவர்; நிர்வாகத்திறன் வாய்க்கப் பெற்றவர். இதனால், மன்னர் ஜஹாங்கீருக்கு நிர்வாகத்தில் பெருந்துணையாய் விளங்கி வந்தார்.

ஒருநாள் தன் தோட்டத்தின் ஒர் பகுதியில் அம்பெய்யும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் தோட்டத்தின் வெளிப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த ஹிந்து சமயத்தைச் சேர்ந்த ஒரு சலவைத் தொழிலாளியின் உடலில் அம்பு பாயவே அவன் அப்போதே உயிரிழந்தான். இதையறிந்த அரசி நூர்ஜஹான் அவன் இறப்புக்கு தானே முழுப் பொறுப்பு எனக் கூறினார். வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி சலவைத் தொழிலாளி சாவுக்குக் காரணமான நூர்ஜஹான் கொலைக் குற்றவாளி எனக் கூறி, அக்குற்றத்திற்கு மரண தண்டனை விதித்துத்