பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

திருத்திக் கொள்ளவும் தெளிவு பெறவும் வாய்ப்பேற்படுகிறது. இதனால் முஸ்லிம்களுக்கு பிற சமயத்தவர்களுக்குமிடையில் தவறான கண்ணோட்டங்கள் மறையவும் மன நெருக்கம் ஏற்படவும் சமூக ஒருங்கிணைவு உருவாகவும் வாய்ப்பேற்படுகிறது.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?

இஸ்லாமிய நெறி பற்றிய உணர்வுகளும் சிந்தனைகளும் பிற சமய மக்களிடையே பரவலாகப் பரவாமற் போனதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு.

பிற இந்தியச் சமயங்களைப் போலல்லாமல் இஸ்லாம் வெளிநாட்டிலிருந்து வந்த அந்நிய சமயம் என்ற எண்ணம் மக்களிடையே அழுத்தமாகப் பதிந்திருப்பதோடு, அறுநூறு ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவை ஆண்டு வந்ததுமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கும் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட ஒரு மார்க்கம் என்ற ஒரு தவறான கருத்து, வரலாற்றாசிரியர்களால் புனைந்துரைக்கப்பட்டிருப்பதாகும். நீண்டகாலமாக நடைபெற்றுவரும் இத்தவறான பிரச்சாரத்துக்கு அதிகாரப் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.

ஐரோப்பாவில் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த சிலுவைப் போரின் விளைவாகவும் இந்தியாவில் இருநூறு ஆண்டுகள் நடைபெற்ற ஆங்கில ஆட்சியில் இங்குள்ள இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைய விடாமல் தடுத்து, அவர்களிடையே வேற்றுமை உணர்வையும் பகைமை உணர்வையும் வளர்க்கும் வகையிலும் ஆங்கில வரலாற்று ஆசிரியர்களால் புனைந்துரைக்கப்பட்ட ஒன்றே ‘இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது’ என்ற கோஷம். இதன் அடிப்படையில்