பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

பெருமானார் (சல்) அவர்கட்கும் வழங்கியதாக இறைவன் தன் திருமறையாம் திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறுகிறான்.

“(நபியே) உமக்கு முன்வந்த இறை தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ அதனையேயன்றி (வேறொன்றும் உமக்குக் கூறப்படவில்லை.” (திருக்குர்ஆன் 41-43)

மேற்கூறிய இறைச் செய்தியிலிருந்து ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதுதான் இறை தூதர்கள் பல நூறாயிரம் பேர்களாக இருந்தாலும் அவர்கள் வாழ்ந்த கால கட்டங்கள் வெவ்வேறாக இருந்தாலும், நாடுகள், பேசிய மொழிகள் பலவாக இருந்தாலும் சமுதாயச் சூழலுக்கும் பெருகி வந்த மக்களின் மன வளர்ச்சிக்குமேற்ப அவர்கள் இறை தூதர்கள் மூலம் பெற்றுவந்த இறைச் செய்திகள்-வேத நெறிகளின் அடிப்படை போதனைகளின் சாரம் ஒன்றாகவே இருந்தன என்பது தெளிவு.

மறை கூறும் இறை தூதர்கள்

மனித குலத்துக்கு இறை நெறி புகட்டி வழிகாட்ட வந்த இறை தூதர்கள் ஒரு இலட்சத்து இருபத்தினான்காயிரம் எனக் கூறப்படினும் இருபத்தைந்து பேர்களின் பெயர்கள், வரலாறுகள் மட்டுமே திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றவர்கள் பெயர்கள் இடம் பெறாவிட்டாலும் அவர்களைப் பற்றியும் ஒட்டு மொத்தமாகத் திருக்குர்ஆன் குறிப்பிடத் தவறவில்லை.

“நபியே! நிச்சயமாக உமக்கு முன்னர் தூதுவர்கள் பலரை அனுப்பியிருக்கிறோம். அவர்களில் சிலருடைய சரித்திரத் தைத்தான் நாம் உமக்குக் கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை.” (திருக்குர்ஆன் 40:78) என்பது திருமறை தரும் இறைவாக்காகும்.