பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

என இறைவன் நபிகள் நாதரை நோக்கிக் கூறுவதாயமைந்துள்ள திருமறை வசனம் தெளிவுபடுத்துகிறது.

அண்ணலாருக்கு முன்னதாக வந்த அனைத்து நபிமார்களும் ஆன்மீகம் தொடர்பான அகவாழ்வு சம்பந்தப்பட்ட வாழ்வியல் நெறிகளைப் போதித்தார்களேயன்றி வாழ்வின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் போதித்தவர்களில்லை. ஏனெனில், அவர்களெல்லாம் வாழ்வின் அனைத்துப் படித்தரங்களிலும் வாழ்ந்து காட்டும் வாய்ப்பைப் பெற்றவர்களில்லை.

வாழ்வின் அனைத்துப் படித்தரங்களிலும்
வாழ்ந்து காட்டிய வழிகாட்டி

நபிமார்களின் குறிப்பிடத்தக்க பெரும் நபியாக விளங்கும் ஆபிரஹாம் எனும் இபுறாஹீம் (அலை) ஒரு படைத் தளபதியாகவோ மக்களை ஆட்சி செய்யும் ஆட்சித் தலைவராகவோ விளங்கியவரில்லை. அதே போன்று ஜீசஸ் என அழைக்கப்படும் ஈசா (அலை) அவர்கள் ஒரு குடும்பத் தலைவராகவோ ஒரு தந்தையாகவோ படைத் தளபதியாகவோ, ஆட்சித் தலைவராகவோ வாழ்ந்து காட்டியவர் இல்லை. தனியராக ஆன்மீக வாழ்வு பற்றி போதித்தவர். அகவாழ்வின் மேன்மை பற்றி அதிகமதிகம் பேசியவரேயன்றி மனித வாழ்வின் அகம் - புறம் எனும் இரு கூறுகளையும் பற்றிப் போதித்தவர் இல்லை.

ஆனால், அதே சமயம் நபிகள் நாயகம் (சல்) வாழ்க்கையில் எத்தனை படித்தரங்கள் - வாழ்க்கை வகைகள் உண்டோ அத்தனையிலும் வாழ்ந்து காட்டும் வாய்ப்பைப் பெற்றவர். ஒரு நல்ல கணவராக, தந்தையாக, வணிகராக, படை வீரராக, படைத் தளபதியாக, படைத் தலைவராக, ஆட்சித் தலைவராக, வாழ்வின் அகம் - புறம் போதித்த ஆசானாக, விஞ்ஞானம் பேசிய மெய்ஞ்ஞானியராக வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் வாழ்ந்து காட்டும் வாய்ப்பை இறைவன் ஏந்தல் நபிக்கு மட்டுமே வழங்கியது