பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

203


முடிகிறதென்றால் அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? கொடிய மிருகங்களான சிங்கம், புலிகளை எவ்வகையில் செயல்பட்டால் ஆட்டிப்படைக்கலாம் என்ற உத்தியைக் கையாளக் கற்றிருப்பதுதான். இதுதான் அவனுக்குள்ள மாபெரும் பலம். இத்தகைய வல்லமையை அவனுக்கு அளித்திருப்பது அவன் பெற்ற கல்வியறிவு. கல்வி என்று நான் இங்கே குறிப்பிடுவது வெறும் ஏட்டுக் கல்வியை மட்டுமல்ல; அனுபவப்பூர்வமாக கற்றுத் தேர்ச்சி பெறும் பட்டறிவும் ஒருவகைக் கல்விதான்.

‘உம்மி’ நபி உணர்த்தும் உயர் கல்வி

மண்ணுள் மறைந்து கிடக்கும் வைரக் கட்டிகளைப் பார்த்தால் அவை அந்த நிலையில் அதிகம் ஒளி பாய்ச்சுவதில்லை. பழுப்பு நிறக் கற்கள் போன்று இருக்கும். அவைகளை அளவான துண்டுகளாக வெட்டி, அவற்றை உரிய முறையில் உரிய வடிவில் இயந்திரம் மூலம் பட்டை தீட்டும் போதுதான் அவை ஒளியுமிழும் வைரக் கற்களாக வடிவம் பெறுகின்றன. எத்தனை பட்டைகளை, எந்த வாட்டத்தில் வடிவமைத்தால் அவை ஒளியை பீச்சியடிக்கும் என்ற நுட்ப முறைகளை நன்கு கற்றுணர்ந்த பட்டை தீட்டும் வல்லுநரால் அதை சாதிக்க முடிகிறதென்றால், வைரத்தின் தன்மைகளையும் பட்டை தீட்டும் தொழில் நுட்ப முறைகளையும் நன்கு அறிந்திருப்பதுதான் காரணம்.

எழுத்து வாயிலாகக் கற்றறியும் கல்வியாக இருந்தாலும் தொழில்முறை மூலம் அறிந்துணர்ந்து தெளியும் பட்டறிவாக இருந்தாலும், ஒருவனது அறிவை வளர்த்து வளப்படுத்துவதாகவே அமைகிறது. இவ்விரு முறைகளும் கல்வி என்றே அழைக்கப்படுகிறது. இவற்றுள் படிப்பறிவு மூலம் பெறுகின்ற கல்வி, அனைத்துத் துறை அறிவையும் நூல்கள் மூலம் தொடர்ந்து எந்நிலையிலும் பெற இயல்வதால் இஃது மிகவும் முக்கியத்துவமுடையதாகக் கருதப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை மற்றவர்களைவிட