பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

297

காட்சியளித்தது. இஸ்லாமிய உணர்வைச் சுவைக்கச் செய்தால் அவர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுவர் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்றாகும்.

நான் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றிருந்த போது வாஷிங்டனுக்கு அருகில் இருந்த மார்ட்டின்ஸ்பர்க் எனும் ஊரில் டாக்டர் ஜியாவுதீன் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்தேன். அன்று வெள்ளிக் கிழமை. "இங்கு ஜும்மா தொழுகை தொழ முடியுமா” என்று கேட்டேன். அப்போது அவர் "அமெரிக்காவில் மசூதிக்குப் பஞ்சமில்லை" என்று கூறி, முக்கிய சாலையில் அமைந்திருந்த ஒரு பெரிய கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார். ஒரு ஜமாத்தை உருவாக்கி அதன் மூலம் ஒரு மாளிகையை வாங்கி, அதை மசூதியாக மாற்றியமைத்திருந்தார்கள். எல்லாம் முறைப்படி நிகழ்ந்தன. வந்திருந்தவர்களில் கருப்பர் இன முஸ்லிம்கள் 60 சதவிகிதம் இருக்கும். வெள்ளை அமெரிக்கர் பத்து சதவீதம் இருக்கும் மற்றவர்கள் வெளிநாட்டு முஸ்லிம்கள். இதுபோல் வாஷிங்டனைச் சுற்றி பல பள்ளிகள் இருக்கின்றன என்ற தகவலையும் தந்தார்.

ரமளான், பக்ரீத் போன்ற பெரு நாட்களுக்கு பெருங் கூட்டம் வருமே அதைச் சமாளிக்க என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, அருகில் ஒரு பெரிய ஸ்போர்ட்ஸ் கிளப் இன்டோர் ஆடிட்டோரியம் இருக்கிறது. ஒரு நாளைக்கு அதைப் பெற்று பெருங்கூட்டமாகக் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றுகிறோம் என்று கூறினார். இப்படியொரு பக்ரீத் தொழுகையை அல்பேனியில் தொழுத அனுபவம் எனக்கு உண்டு. இத்தொழுகைகளை ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் இருந்து தொழுகிறார்கள். ஒரு இஸ்லாமியக் குட்டி மாநாடு போலவே இப் பெருநாள் தொழுகைகள் அமைகின்றன.

மொத்தத்தில் அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் இஸ்லாம் விரைவாக மக்களை ஈர்த்துக்