பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

கொண்ட துதிபாடிகளுமே ஆவர். வெறும் புகழ்ச்சியினால் எந்த விளைவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

ஆட்சி மொழி - பயிற்சி மொழியே வளர்ச்சிக்கு ஆதாரம்

ஒரு மொழி ஆட்சி மொழியாகவும் பயிற்சி மொழியாகவும் அமைந்து விட்டதென்றால் அதன் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் எந்த சக்திக்கும் கிடையாது. இவ்விரு துறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டால் எந்த மொழியும் பிழைத்து கொள்ளும் என்பதற்கு ஹீப்ரு மொழி ஒரு வாழும் சான்றாக விளங்குகிறது.

செத்த மொழி பிழைத்த விந்தை

ஏறக்குறைய 'செத்த மொழி' என்று மகுடம் சூட்டி அழைக்கப்பட்ட ஹீப்ரு மொழியை இரண்டாவது உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டின் ஆட்சிமொழி, கல்விக் கூடங்களில் பயிற்சி மொழி என அறிவித்தனர். விளைவு, இன்று ஆற்றல் மிக்க வாழும் மொழியாக உருமாற்றம் பெற்றுவிட்டது. இதிலிருந்து பயன்பாட்டைப் பொருத்தே ஒரு மொழியின் சிறப்பும் வாழ்வும் அமைகிறது.

தமிழைப் பொருத்தவரை பெயரளவுக்கு ஆட்சி மொழியாகவும் அரசுப் பள்ளிகளில் ஓரளவுக்குப் பயிற்சி மொழியாகவும் சுருக்கப்பட்டு விட்டதனால் தமிழின் ஆற்றலைப் பற்றிய சந்தேகம் பலருக்கும் எழ வேண்டியதாகி விட்டது. இன்னொரு வருந்தத்தக்க நிலை என்னவென்றால் தொலைக் காட்சிகளில் நிகழ்ச்சியை நடத்தக்கூடிய பெரும்பான்மை பெண்கள் ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகக் கொண்டு படித்ததனால், அளவுக்கதிகமாக ஆங்கிலத்தைக் கலந்து தமிழ் பேசுகிறார்கள். இதைக் கேட்கும்போது ஆங்கிலத்தின் துணையில்லாமல் தமிழால் தனித்து இயங்க இயலாது என்ற மனவுணர்வே உண்டாகும். இந்நிலைமைகள் மாற வேண்டும். வெறும் வெளி அழகுத்