பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

போன்று மருத்துவத் துறையின் அனைத்து ஆய்வுகளையும் தொடங்கி வைத்தவர்கள் இப்னு சினா, அல்புரூனி, இப்னு அல்ஹைத்தாம் போன்ற மருத்துவ இயல் அறிஞர்கள் ஆவர். அறிவியல் வளர்ச்சிக்கு உயிரோட்டமாக பெருமானார் வாழ்வும் வாக்கும் திருமறையின் தூண்டுதலும் அறிவியல் அடிப்படையிலான இறை வசனங்களும் இவற்றின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட இஸ்லாமியக் கல்வி முறையும் அமைந்திருந்தன.

பள்ளி வாசல் தோறும் ஆய்வரங்கு

1984ஆம் ஆண்டு நான் எகிப்து நாட்டுக்குச் சென்றிருந்தபோது இஸ்லாமியப் பண்பாட்டை விளக்கும் ஒரு அருங்காட்சியத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு பகுதியில் பள்ளிவாசல் வடிவில் ஒரு அரங்கு இருந்தது. அதனுள் சென்ற போது, தொழுகை இல்லாத நேரங்களில் அம்மசூதி மதரஸாவாகப் பயன்படுத்தும் முறையில் அமைந்திருந்தது. உஸ்தாது முன்னால் அமர்ந்திருக்க முக்கால் வட்ட வடிவில் மாணவர்கள் அமர்ந்து பாடங்கேட்கின்றனர். அதற்கு அப்பால் ஒரு பெரிய நூலகம், அதனோடு இணைந்த நிலையில் அமைந்துள்ளது. அதற்கு அடுத்ததாக ஒரு ஆய்வுக்கூடம் இருந்தது. இவ்வாறு இறை வணக்கத் தொழுகைத் தலம், நூலறிவு புகட்டும் நூல் நிலையம், ஆய்வறிவு தரும் ஆய்வுக் கூடம் அனைத்தும் அமைந்த ஒரு பெரும் வளாகமாக அமைந்திருந்தன அன்றைய பள்ளி வாசல்கள். நாயகத் திருமேனியின் காலத்திற்குப் பின்னர் அமைந்த பள்ளிவாசல்களின் நிலையை அந்த அருங்காட்சியகம் மட்டுமல்ல; அருகில் அமைந்திருந்த அல்-அஸ்கர் பல்கலைக் கழகமும் இன்றும் வாழும் சான்றாக அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன்னதாக உருவாக்கப்பட்ட உலகின் முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையை இன்றும் தக்க வைத்துக் கொண்டுள்ள இப்பல்கலைக் கழகம், தொழுகைக்கான பகுதி, மாபெரும் நூலகம், அனைத்து அறிவியல் பிரிவுகளுக்கான ஆய்வுக் கூடங்கள்