பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67


ஆனால், இவ்வான மண்டல நட்சத்திரங்களும் கோள்களும் எவ்வாறு உருவாயின என்பதை விஞ்ஞானிகள் பன்னெடுங்காலமாக ஆய்வு செய்து, அதற்கான மூல காரணங்களைத் தெள்ளத் தெளிவாகக் கண்டறிந்து உலகுக்குப் புலப்படுத்தியிருக்கிறார்கள்.

வானம் முழுவதிலும் ஹைட்ரஜன் (Hydrogen) எனும் வாயுவும், ஹீலியம் (Helium) எனும் வாயும் கலந்து பரவியிருந்தன. இவ்வாறு பன்னெடுங்காலமாக புகை மண்டலமாகப் பரவியிருந்த இவ்விரு வாயுக்களும் இணைந்து இறுக்கமடைந்து வந்தன. இறுக்கம் அடைய அடைய அவற்றின் அடர்த்தி அதிகரித்துக் கொண்டே சென்றது. இதற்கு மேல் இறுக்கமடைய இயலாது என்ற நிலை ஏற்பட்டபோது, அப்புகை மண்டலம் வெடித்துச் சிதறியது. இதையே பெரும் வெடிப்பு (Big Bang) என்றழைக்கப்படுகிறது. எப்போது வானத்தில் புகை மண்டலம் உருவாகியது என்பதை துல்லியமாகக் கணித்துக்கூற விஞ்ஞானிகளால் இயலாவிட்டாலும் 'பெரு வெடிப்பு' நிகழ்ந்த காலத்தை ஓரளவு அனுமானித்து, நட்சத்திர மண்டலம் உருவானது ஆயிரம் கோடி ஆண்டுகட்கு முன்பு இருக்கலாம் என்று அனுமானித்திருக்கிறார்கள்.

நட்சத்திரங்களைப் போன்ற ஒரு நட்சத்திரமே சூரியன். ஒரு கட்டத்தில் சூரிய நட்சத்திரம் வெடித்துச் சிதறியது. அச்சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பே பூமி. பின், பூமியிலிருந்து பிரிந்து சென்றதே சந்திரன். மற்ற கிரகங்கள் எனப்படும் கோள்கள் அனைத்தும் சூரிய தெறிப்பின் விளைவாக உருவானவைகளேயாகும். இவ்வாறு சூரிய வெடிப்பு நிகழ்ந்து 450 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.

சூரியனிலிருந்து பூமி தெறித்து விழுந்ததனாலேயே இன்னும் பூமிக்குள் வெப்பம் கனன்று கொண்டேயிருக்கிறது. அவ்வப்போது எரிமலைகளும், நில நடுக்கங்களும்,