பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

நில அதிர்வுகளும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படுவது தவிர்க்க இயலாததாகவும் இருக்கின்றது.

இத்தகைய பெரு வெடிப்புக் கொள்கையை விவரிக்கும் வகையில் திருமறையில்,

"ஆரம்பத்தில் எல்லாமே ஒரே புகை மண்டலமாக இருந்து, அதிலிருந்துதான் பல பாகங்களாக பல கால கட்டங்களில் பிரிந்து சென்றிருக்கின்றன" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதானது, இன்றைய விஞ்ஞானிகளை மேலும் திகைப்புக்குள்ளாக்கியுள்ளது.

குர்ஆனில் கருத்தரிப்பு

இவையெல்லாவற்றையும்விட மிக அற்புதமான அறிவியல் செய்தியொன்று திருக்குர்ஆன் திருமறையில் காணக்கிடைக்கிறது. இச்செய்தி, மருத்துவ உலகையே மலைக்கச் செய்துள்ளது. இச்செய்தி டாக்டர் மாரிஸ் புகைல் போன்ற மருத்துவத் துறை பேரறிவாளர்களை - விஞ்ஞானிகளை இஸ்லாத்தின்பால் இணையச் செய்துள்ளது. அதுதான் கருத்தரிப்பு எப்படி நடைபெறுகிறது என்ற நுட்பமான செய்தி. திருமறையில்,

"அவனே, ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டு மனிதனைப் படைத்தான்." (16:4)

"அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்கவில்லையா?" (75:37)

"(பின்னர் ஆண்பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு, நிச்சயமாக நாம்தான் மனிதனைச் படைத்தோம்." (76:2)

என்ற இறை வசனங்கள் ஒரு துளி இந்திரியத் துளியைக் கொண்டு கருவறையில் அழகிய திருவுருவாக மனிதக் கரு உருவாகியதை அழகாகவும் தெளிவாகவும் விளக்குகிறது.