இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆத லாலே அவற்றினை
அகற்றி விட்டு, அவளிடம்
போதல் மிகவும் நலம்’எனப்
புகன்றான் விறகு வெட்டியும்.
‘உண்மை, உண்மை, உண்மைதான்.
உடனே பற்கள் நகங்களை
என்னை விட்டுப் பிரித்திடு;
எனது ஆசை தீர்த்திடு.’
சிங்கம் இதனைச் சொன்னதும்
சிறிதும் தயக்கம் இன்றியே
அங்கே அடுத்த நிமிஷமே
அந்த விறகு வெட்டியும்,
நகங்கள், பற்கள் யாவையும்
நன்கு பிடுங்கி விட்டனன்.
மிகவும் வலித்த போதிலும்
வெளியில் சிங்கம் சொல்லுமோ?
பிறகு சிங்க ராஜனைப்
பிரியங் காட்டித் தன்னுடன்
விறகு வெட்டி அழைத்தனன்;
வீடு நோக்கிச் சென்றனர்.
64