பக்கம்:ஈச்சம்பாய்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர் ஊஞ்சல்


'கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும்' பழமொழியை 'குதிரை தேய்ந்து கழுதையாகும் என்று புதுமொழியாய் சொல்லலாம்போல், கருப்புக் கண்ணாடிப் பாளமாய் ஒளிர்ந்த அந்த தேசிய நெடுஞ்சாலையில் குதிரைப் பாய்ச்சலாய் ஓடிவந்த அந்த வேன், அந்தச் சாலையில் கிளை பிரிந்த கப்பிச் சாலையில் நொண்டியடித்தது.

உள்ளுக்குள் சுமார் இருபது பேர் இருக்கலாம். அத்தனை பேர் கால்களிலும், கைகளிலும் உழைப்பின் முத்திரைகளான கன்னங்கரேல் காய்ப்புகள்: ஆனாலும் சிறிது வெள்ளையும், சொள்ளையுமாய்தான் காணப்பட்டார்கள்.

பாம்படம் போட்ட கிழவிகள் இரண்டு பேர். கம்மல் வைத்த நடுத்தரப் பெண் ஒருத்தி, மதர்ப்பான இளம் பெண் ஒருத்தி, அவள் மடியில் கன்னங்குழியச் சிரித்து, ஓரம் சாய்ந்துச் சிரிக்கும் அலங்காரப் பொம்மை போன்ற இரண்டு வயதுக் குழந்தை. இரண்டு, மூன்று சிறுவர், சிறுமிகள்.. தள்ளாடும் தாத்தாக அவருக்கு மகனாய்த் தோன்றிய அறுபது வயதான காந்தி வேட்டிக்காரர். எஞ்சியவர்கள் இருபதுக்கும், நாற்பதுக்கும் இடையே... மூன்று தலைமுறைக்காரர்கள்... ஏதோ ஒரு பட்டியில் நடக்கும், கல்யாணத்திற்குப் போவதாக இருக்கலாம்.

மாப்பிள்ளை மிடுக்கில் ஒரு இளைஞன்; ஜரிகை ஊடகமான பட்டு வேட்டியில், பட்டுச் சட்டையோடு இரவில் நடப்பதற்கு, பகலில் ஒத்திகை கொடுப்பதுபோல் தோன்றியது... அந்தச் சமயம் பார்த்து, 'அந்த அரபிக் கடலோரம்' பாட்டு: அதற்கு ஏற்றாற்போல் சிறுவர்கள் ஆடுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/100&oldid=1371821" இலிருந்து மீள்விக்கப்பட்டது