பக்கம்:ஈச்சம்பாய்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

ஈச்சம்பாய்



முட்பாம்புகளாய் படமெடுக்கும் கருவேல மரங்கள் - அவற்றின் மேல் படர்ந்து, உடம்பை சிதைத்துக் கொள்ளும் ஊணான் கொடிகள்... மற்போர் செய்வதுபோல் நெக்கி அடித்து நிற்கும் சப்பாத்திக் கள்ளிகள், கற்றாழைகள்... இடைவெளிகளை இட்டு நிரப்பும் கடுகாட்டு எருக்கஞ் செடிகள்...

உடும்போ, பெருச்சாளியோ, உள்ளிருக்கும் மண் பாதாளக் குகைகள்... கரையான் அமைத்து, கருநாகம் குடிபுகுந்த செதிர் மண் புற்றுக் கோபுரங்கள்... இதற்கு சுற்றுப்புற வேலிகளான பாறைக் குவியல்கள்... சவுக்குத் தோப்பு நரிகள்.... எதிரும் புதிருமான ஒரு ஓணான். ஒரு காக்கா... காக்கா ஓணானைக் கொத்தப் போகிறது... ஓணான் அதன் காலைக் கடிக்கப் போகிறது.

பனைப் பொந்திலிருந்து மேலே எழும்பி, புறாக்கள் பதறி அடிக்கின்றன... ஏழைகளின் உடைபோல், இலை கிழிந்த கல்வாழையில் ஏறி நின்ற அணில், மூக்கில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்துகிறது.

அந்த வேன் ஒரு 'விலக்கில்' ஆமையாய் ஊர்ந்து மறுபக்கமாய்த் திரும்பிய, பாதையற்ற வழித்தடயத்தில் ஒப்புக்கு கழுதைபோல் ஒரு கனைப்பு கனைத்துவிட்டு ஓடிய சக்கரங்களை நடக்க வைக்கிறது.

'போயும், போயும் இந்தப் பக்கமா பொண்ணு எடுக்கணும்' என்று மைத்துனன் காதில் விழவேண்டும் என்பதற்காகவே ஓங்கிக் கத்திய கைக் குழந்தைக்காரி, மூக்கைப் பிடித்துக் கொள்கிறாள், சிறிது வினாடிகளில்.... சில மீட்டர் தூரத்தில், அழுகிப் போன ஒரு நாய் கவிழ்ந்து கிடக்கிறது. தலை சப்பிப் போய், தரையோடு தரையாய் கிடக்கிறது. அதன் பிட்டம், ரத்தக் கட்டிகளாய்ச் சிதறிக் கிடக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/102&oldid=1534478" இலிருந்து மீள்விக்கப்பட்டது