பக்கம்:ஈச்சம்பாய்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

123


அய்யய்யோ... எனக்கும் அப்படிப்பட்டவன்தான் வருவானோ... சீ அப்பா அப்படியா என்னை பாழுங் கிணத்துல தள்ளுவாரு... தள்ள மாட்டாருதான்... அவருகிட்டயும் ஆள் மாறாட்டம் செய்திருந்தால், மாட்டிக்கப் போறது நான்தானே... தலைவிதின்னு தப்பிக்கப்போறது அப்பா. அதுல அவரு சுமையும் எறங்கிப் போகும்.

சமையலறைப் பக்கம் இருக்க மனமில்லாமல், ராசகுமாரி கொல்லைப்பக்கமாக வந்தாள். தலை கனத்தது. உள்ளுக்குள், கருப்போ, சிவப்போ ஏதோ ஒன்று அவள் குரல்வளையைப் பிடிப்பதுபோலிருந்தது. எல்லாமே அந்நியமாய்த் தெரிந்தது. மீண்டும் பெற்றவர்கள் திண்ணையில் வந்து பிறந்தவளைப் பற்றி பேசுவது கிசுகிசுப்பாய்க் கேட்டது. இரண்டில் ஒன்றைக் கேட்டுவிட வேண்டும் என்ற வேகத்தில், ராசகுமாரி அவர்கள் பக்கம், வந்து நிலைப்படியில் இரண்டு கைகளையும் விரவிப்போட்டு, தலையை வாசலுக்கு வெளியே கொண்டு போனாள். அவர்கள் பேசி முடித்து விட்டார்கள் போலும். கிண்ணிப் பெட்டியில் இருந்த எள்ளுருண்டையை இருவரும் தின்று கொண்டிருந்தார்கள். எட்டிப் பார்த்த மகளுக்கு அம்மா, எள்ளுருண்டையைக் கொடுத்தாள். இவளும், அதை வாங்கிக் கொண்ட அந்த எள்ளுருண்டையைக் கசக்கிப் பிழிந்து எண்ணெயாக்கினாள். ‘எனக்கத் தெரியாம, எங்கிட்ட கேக்காம என்ன பாக்க விடாம. என் தலையில எவனையும் கட்டுறதுக்கு ஒங்களுக்கு எத்தனாவது சட்டத்தில் இடமிருக்கு என்று கேட்பதற்காக, அம்மாவை விட்டு விட்டு, அப்பாவையும், அப்பாவை விட்டுவிட்டு, அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தாள். ஆனாலும் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது, பெரியவளானதும், இவள் படிச்சுக் கிழிச்சதுபோதும், வீட்டு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/125&oldid=1371723" இலிருந்து மீள்விக்கப்பட்டது