பக்கம்:ஈச்சம்பாய்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

ஈச்சம்பாய்


வேலையைப் பார்க்கச் சொல்லுன்னு அப்பா சொன்னபோது, அதற்குப் பதிலாய் இவள் சிணுங்கியபோது, அப்பா எப்படி கண்களை உருட்டிப் பார்த்தாரோ, அப்படி இப்போதும் பார்த்தார். கண்கள் ரத்தக் கட்டிகளாக, அவளை ரத்தமும் சதையுமாய் குலைக்கப் போவதுபோல் பார்த்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, வாசற் படியில் நின்றவளை கருப்பசாமி கறாராகப் பார்த்தாரே தவிர, கண்டிக்கவில்லை. இதுவே அவளுக்குக் கொஞ்சம் தெம்பைக் கொடுத்தது. கைகள் இரண்டையும் திருவோடுபோல் குவித்தபடி, அப்பாவை கோவில் மூலவரைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். உதடுகள் துடித்தன.

“ஒங்ககிட்ட பேச பயமா இருக்குப்பா... வெட்கமாகவும் இருக்குப்பா... நீங்களே சொல்லுங்கப்பா... மாப்பிள்ளை எப்படிப்பா... எப்படிப்பா... நான் முந்தானைய முகம் தெரியாதவனுக்கா விரிக்கணும்? இடம் தெரியாத வீட்டிலா இடறி விழணும்? சொல்லுங்கப்பா... ஒரு தடவ... ஒரே ஒரு தடவ ஒங்கள தலை குனிய வைக்காம நடந்தவப்பா... என்னையும் தலைகுனிய வச்சுடாதிங்கப்பா...”

ராசகுமாரி, தந்தையின் முகத்தை மலங்க மலங்கப் பார்த்தபோது, அவர் மகளுக்கு ஒரு செய்தியை மனைவி மூலம் சொன்னார்.

“இந்தா பாரு... ஒன்னத்தான் பிள்ள... இவளுக்கு கல்யாணம் நிச்சயமாயிட்டு பாரு. இனிமே வீட்டுக்கு வெளியில போக வேண்டாமுனு சொல்லு... பீடி சுத்துனதுபோதும். நான் தட்டாசாரியைப் பார்த்துட்டு வாறேன்... நாளைக்கு தென்காசியில தங்கம் வாங்கணும்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/126&oldid=1371732" இலிருந்து மீள்விக்கப்பட்டது