பக்கம்:ஈச்சம்பாய்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

ஈச்சம்பாய்


இரண்டு வைக்கப் போர்களின் இடுக்கு வழியாய் நடந்து, அதற்குப் பக்கத்திலுள்ள புளியமரக் கிளையைப் பிடித்து தலையை தொங்கப் போட்டு நின்றவள், சத்தம் கேட்டு நிமிர்ந்தாள். துரைச்சாமி, ஒரு பக்கமாக நடந்து கொண்டிருந்தான். உலக்கை தரையில் பட்டு பள்ளம் பறிப்பது போன்ற நடை. இவள் செருமினாள். அவன் திரும்பிப் பார்த்துவிட்டு, போய்க் கொண்டே இருந்தான். அவனிடம் கேட்டுப் பார்க்கலாமா... அய்யய்யோ அவனுக்கும் நிச்சயமாயிட்டே...

ராசகுமாரி, கீழே விழாமலிருப்பதற்கு புளியங்கொம்பைப் பிடித்துக் கொண்டாள். சொல்லி வைத்ததுபோல், மூன்றுபேர் அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்தார்கள். இளவட்டங்கள். அந்த கருட்டைத் தலையன் ஒரு ஒயர்மேன். அவளைப் பார்த்து பலதடவை பல்லைக் காட்டியிருக்கான். இவளும், அவனுக்கு சலுகை காட்டுவதுபோல் பல்லைக் கடிக்காமல் இருந்தாள். ஒரு தடவை அவன் நடுங்கிய குரலில் 'ராசகுமாரி, நான் மத்தவங்க பார்க்கிற அர்த்தத்துல ஒன்னப் பார்க்கலே... நெசமாவே ஒன்னை... என்று சொன்னபோது, நின்று கேட்டவள். பிறகு ஓடிப் போய்விட்டாள். அதற்குப் பிறகும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஒதுங்கிக் கொண்டாள். ‘அடுத்த சாதிக்காரன பார்க்க முடியுமா.... அப்படியே நாம நினைச்சாலும்... அப்பா நினைப்பாரா... தூக்குப் போட்டுச் செத்துட மாட்டாரா... சரி, அவன விடு... அதோ ரெண்டு பேரு போறானுவளே... அவங்களும் ஒங்கிட்ட எத்தன தடவை வளைய வளைய வந்தாங்க.... ஏறெடுத்துப் பார்த்தியா... ஒனக்கு என்ன கெடைச்சுது... ஒன் மாப்பிளைய நீ தீர்மானிக்க கூட வேண்டாம். ஒன்னால பாக்கக்கூட முடியலியே... அப்பா தூக்குப் போடக்கூடாதுன்னு நீயே தூக்குக் கயிற ஒரு தாலியா போடப் போறியா...’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/128&oldid=1371748" இலிருந்து மீள்விக்கப்பட்டது