பக்கம்:ஈச்சம்பாய்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

143



"அண்ணாத்தே... தயவு செஞ்சி இந்தக் கழுதையை கூட்டிக்கிட்டுப் போ அண்ணாத்தே.... அப்படிப் பாக்காத. எனக்குப் பயமா இருக்கு. ஒன்ன இவளோட குடித்தனம் பண்ணுன்னு சொன்னா... என் வாய் அழுவிடும். அப்படி நீ குடித்தனம் பண்ணினால் நீ அழுவிப் பூடுவ.. நான் அப்படிச் சொல்லல. ஆனால் இவள் இங்கே வந்ததிலிருந்து என் புருஷன் என்னை தினம் அடி அடின்னு அடிச்சி மிதிமிதின்னு மிதிச்கப் போடறான்..."

அவள் விம்மினாள்.

கன்னய்யா, முதல் தடவையாகப் பேசினான். புருவத்திற்குக் கீழே இருந்த இரண்டு ரத்தக் கட்டிகள் தெறித்து விடும்படி கத்தினான்.

"என்னை என்ன செய்யச் சொல்ற? நான் இன்னாதான் பண்ண முடியும் ஒண்ணே ஒண்ணு பண்ணலாம். என் மவனை எந்த மவராசன் ஜகயக் காலாவது பிடிச்சு அனாதை ஆசிரமத்துல அடச்சிட்டு, நான் தூக்குப் போட்டுச் சாவலாம். வேற என்னத்த பண்ண முடியும்?"

"இவள இங்க இருந்து முடியப் பிடிச்சி இஸ்துக்கினு போ. வெளில கொண்டு போயி என்னா வேணுமானாலும் பண்ணு. கொல்லணும்னாலும் கொல்லு. அண்ணாத்தே, இந்தக் கயிதய கழுத்தப் பிடிச்சி வெளில தன்ளு அண்ணாத்தே.."

கன்னய்யா பல்லைக் கடித்துக் கொண்டே பதிலளித்தான்.

"இவள் கழுத்தப் பிடிக்க எனக்கு ரைட் இல்ல. அதுல கிடக்கிறத வாணுமுன்னால் கேக்கலாம். பூவம்மா! ஒன்னத்தான் ராசாத்தி... ஒன் கயுத்துல கிடக்கிற தாலிய மரியாதியா கழட்டிக் கொடுக்கிறியா மவராசி? புண்ணியவதி! கொடுத்திடும்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/145&oldid=1371893" இலிருந்து மீள்விக்கப்பட்டது