பக்கம்:ஈச்சம்பாய்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

ஈச்சம்பாய்



என்றாலும், பதவி நீட்டிப்பு சம்பந்தப்பட்டவரின் பாரபட்சத்தை பலவீனப்படுத்தும் என்பதை அறிந்தவர். அதோடு, கீழே இருப்பவர்கள் சாபம் இடுவார்கள் என்பதை விட, ஒரு பதவி நீட்டிப்பில் பத்துக்கு மேலான பதவி உயர்வுகள் அடிபட்டுப் போகும், என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தவர். பின்னால் இருப்பவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று வழிகாட்டியாய் இருக்க விரும்பியவர். இதனால் நீட்டிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். மனைவியிடமும் இதைச் சொல்லிவிட்டார். அப்போது அந்த அம்மா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இவர் காதில் அவர்சொல் அம்பலம் ஏறாது என்பது அந்த அம்மாவுக்கே தெரியும். ஆனாலும் இப்போது சமயம் பார்த்து தாளிக்கிறாள். மனைவி சொல்வதும் ஒருவகையில் சரிதானோ- மகளுக்கு, மனைவிப் பதவி கிடைக்காமல் போவதற்கு இவரது பதவி ஓய்வும் ஒரு காரணமோ...

பழனிச்சாமி யோசித்தார். தப்புசெய்துவிட்டேனோ... மகாத்மா காந்தியைப் பற்றிய விமர்சனங்களில், அவர் தனது சத்திய சோதனைக்கு இந்தியாவை ஒரு சோதனைக் கூடமாக்கினார் என்பது ஒரு விமர்சனம், நாடளவில் அவர் என்றால், வீடளவில் இவரோ... நேர்மை, சுயமரியாதை ஆகியவற்றை, சகல விளைவுகளோடும் சோதித்துப் பார்க்க வீட்டையே சோதனைக் கூடமாய் ஆக்கிவிட்டாரோ..... பதவி நீட்டிப்பை ஏற்றுக் கொண்டிருந்தால், புனிதா, இந்நேரம் மாங்காய் கடித்திருப்பாள். நீட்டிப்பு கிடக்கட்டும்... பதவியில் இருந்த முப்பதாண்டுக் காலத்தில், சக அதிகாரிகளைப் போல், சாதிய மனப்பான்மையுடன் செயல்பட்டிருந்தால், இந்த மாப்பிள்ளையை மட்டும் நம்பியிருக்க வேண்டிய அவசியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/154&oldid=1371761" இலிருந்து மீள்விக்கப்பட்டது