பக்கம்:ஈச்சம்பாய்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

175



காருக்கு சீன் போட்டு அலங்கரிக்க அவனுக்கே அனுப்பலாம்... எல்லாம் நீ கொடுத்த இளக்காரம்.. இங்க கிடைக்கிற பத்தாயிரம் ரூபாய் வேலையில சேருடான்னு நீ எப்பவாவது சொல்லி இருக்கியா. கடைசில, நான்தான் அனாதையா போயிட்டேன்... பேசாம எம்மேல கார ஏத்திக் கொல்லச் சொல்லு.... இந்த இன்சூரன்ஸ் பணத்த எப்படிக் கட்டப் போறோம்?... வாங்குற சம்பளமே எல்லா பிடிப்புக்கும், மஞ்ச மசாலா அரிசிக்கும் போயிடுது... இந்த ஆறாயிரம் ரூபாய்க்கு எங்க போறது?-- எங்கேயாவது ஓடிப்போகப் போறேன்... இதனால உனக்கும் நிம்மதி. அவனுக்கும் நிம்மதி..."

ராமையா, கையிலிருந்த இன்சூரன்ஸ் கடிதத்தை கிழிக்கப் போனார்... கோதையம்மா அதை லாவகமாக பிடுங்கிக் கொண்டு, அவர் தோளில் கை போட்டாள். அவரது கட்சியின் நியாயம், அவளுக்கு புரிந்தது. அப்படிப் புரியப் புரிய, மகன்மீதிருந்த அனுதாபம், கோபமாகவும், கணவன் மீதிருந்த கோபம் அனுதாபமாகவும் மாறிக் கொண்டிருந்தன.. அவளது பேச்சிலும் இது புலப்பட்டது.

'பேயனுக்கு வீட்டு நிலைமை தெரியாமப் போச்சே... பிள்ளையா அவன்... சரி.. சாப்பிட வாங்க.... எதுக்கும் ஒரு வழி பிறக்கும்... காலையில பேசிக்கலாம்... சரி சாப்பிடவாங்க..'

"நான், இனிமேல் இந்த வீட்டுல சாப்பிடணுமுன்னா, நீ ஒரு, வாக்குக் கொடுக்கணும்..."

"சொல்லுங்க... நீங்க சாப்பிடுறதுதான் எனக்கு முக்கியம்..."

"அடுத்த தடவை அவன் டெலிபோனுல பேகம்போது, அவன் வாங்குன கார வித்துட்டு, நமக்கு பணம் அனுப்பச் சொல்லு.... சொல்வியா. சொல்லுவியா..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/177&oldid=1371857" இலிருந்து மீள்விக்கப்பட்டது