பக்கம்:ஈச்சம்பாய்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

43


சமாதானம் செய்து கொண்டான்... அந்தச் சபதத்தின் மறுபக்கத்தைக் காட்டவே படிதாண்டப் போகிறேன்...

மாரிமுத்து, முதற்படிக்கட்டில் கால் வைத்தபடியே நின்றான். பின்னர் மூன்று படிகளையும் ஒரே தாவாய்த் தாவி, இருபக்கமாக உள்ள வெளித் திண்ணைகளின் இடைவெளிச் சமதளத்தில் நடந்து வாசற்படியில் நின்றான்.. உள்ளே எட்டிப் பார்த்தான். கோவில் கருவறைபோல் மறுமுனையில் சமையற்கட்டு தெரிந்தது.... இரண்டாவது கட்டில் உற்சவ மூர்த்திகளாய் ஆண்களும், பெண்களுமாய் ஐந்தாறுபேர்... அத்தனை பேரிடமும் அட்டகாசமான சிரிப்புகள்.... மாரிமுத்துவால் எந்தச் சிரிப்பையும் தனிப்படுத்த முடியவில்லை. அத்தனையும் கலப்படச் சிரிப்பு. அந்தச் சிரிப்பு அவனுள் ஒரு ஆவேசத்தை ஏற்படுத்தியது... கணுக்கால் வரைக்கும் வியாபித்த எட்டு முழ மல் வேட்டியை தார்ப்பாய்க்கப் போனான். பிறகு அது மரியாதைக்குரிய செயல் அல்ல என்று நினைத்தவன் போல் வேட்டியை இறுக்கிக் கட்டினான், வெளிவாசலை பாதிமறைத்த தேக்கு கதவை ஒரு உதை, உதைத்து வழி ஏற்படுத்தினான். அங்கிருந்து முதற்கட்டுக்கு வந்து, உள் திண்ணை இடைவெளியில் நடந்து மாட்டுத் தொழுவத்தையும், உறைக்கிணற்றையும் தாண்டி மலை மலையாய் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை ஏறெடுத்தும் பார்க்காமல், இரண்டாவதுகட்டு வாசற்படியையும் தாண்டி, நாற்புறமும் செவ்வக வடிவிலான மேல் தளங்களுக்கு நடுவிலுள்ள கீழ்த்தளத்தில் - ஆவேசமாக நடந்தான். எதிர்திசையை கண்ணாடாமலேயே பார்த்தான்.

தென் பத்தியில் கிழக்குப் பக்கம் ஊஞ்சல் பலகை.... இவன் அப்பா கொண்டு வந்து போட்ட மாம்பலகையாம்... அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/45&oldid=1371929" இலிருந்து மீள்விக்கப்பட்டது