பக்கம்:ஈச்சம்பாய்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

85


“நான் சாகறதைப் பத்திப் பயப்படல. ஆனால் கவலைப்படறேன். எனக்குப் பிறகு இவரை யார் பார்த்துப்பா? ஒரு நிமஷங் கூட இவரை யாராலயும் பார்த்துக்க முடியாதே. ஆண்டவா, பகவானே, நான் மனசாலேயும் ஒரு பத்தினின்னா, அவருக்கு எதையும் தாங்கிக்கிற சக்தியைக் கொடு, யாரையும் அண்டாமல் நிற்கற வலுவக் கொடு. பகவானே, ஈஸ்வரா, எம்பெருமானே... மீனாட்சி! ஆண்டவன் கைவிட்டாலும் நீ மாமாவைக் கைவிட்டுடாதே.... அப்பப்ப அவர பார்த்துக்கோடி.”

மீனாட்சி, மாமியின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தாள். அங்கிருந்தபடியே கவரில் மாட்டியிருந்த அவர்களது இளவயது போட்டோவைப் பார்த்தாள். மாமி சொன்ன. நோய், தனக்கு வந்ததுபோலவும், மாமியிடமே ஆறுதல் தேடுவதுபோலவும் எழுந்து, அவள் தோளில் சாய்ந்து கொண்டாள். ஆதிபராசக்தியை அடையாளம் கண்டவள்போல் மாமியைப் பிரமையயோடு பார்த்தாள். பார்த்தபடியே நின்றாள்.

திடீரென்று படுக்கை அறையில் சத்தம் கேட்டது.

லட்சுமி மாமி, மீனாட்சியை உதறிவிட்டு உள்ளே ஓடினாள். பஞ்சாபகேசன் தூக்கத்தில், பிளாஸ்கைத் தட்டிவிட்டு, இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார். அவரையே பார்த்தபடி அப்படியே நின்றாள் மாமி. பிறகு, அவரது கைக் கடிகாரத்தைக் கழற்றி வைத்தாள்.

இனிமேல் அவர் கை மொட்டையாகவே இருக்கணும். இன்னும் ஒரு மாதத்துக்கு அப்புறம், அவர் கைக் கடிகாரத்தை வீசி எறிந்தால், ‘யார் அத எடுத்துக் கொடுப்பா?’

- அமுதசுரபி, தீபாவளி மலர் - 1983
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/87&oldid=1371864" இலிருந்து மீள்விக்கப்பட்டது