பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

ஈரோடு மாவட்ட வரலாறு


அருங்காட்சியத்திலும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சில நடுகற்கள் கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

(ஆ) தலைப்பலி நடுகற்கள்

கொற்றவைக்குத் தங்களைத் தாங்களே தலையை அரிந்து தலைப்பலி கொடுக்கும் நினைவுக்கற்கள் சென்னிமலை, விசயமங்கலம், திங்களூர், பவானி, அந்தியூர் ஆகிய ஊர்களில் உள்ளன. இதற்கு நவ கண்டம் கொடுத்தல் என்று பெயர். சென்னிமலை மலைப்படி அருகில் '"சாவான் கோயில்" உள்ளது. அதனைச் சோழன் பூர்வபட்டயம் சாவாரப் பலிக்கல் என்று கூறும்.

(இ) புலிப்போர் நடுகற்கள்

சிவகிரி, புறாப்பாளிக்காட்டு வலசு, காஞ்சிக்கோயில், வாய்ப்பாடி, வெள்ளோடு, ஊராட்சிக் கோட்டை, தாமரைக்கரை. ஒந்தனை, பெருந்தலையூர், கன்னிவாடி, மயிலம்பாடி, சோதளாபுரம் ஆகிய ஊர்களில் புலியுடன் போர் செய்து வீரமரணம் அடைந்தவர்கட்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

(ஈ) கற்புடைய மகளிர் நடுகற்கள்

இறந்த கணவனோடு உடன் உயிர் துறந்து வீர சுவர்க்கம் புகும் பெண்களுக்குக் கணவனுடன் மூன்று நிலைக்கற்கள் எடுப்பது உண்டு. இக்கற்களை மாசதிக்கல், மாஸ்திக்கல் என்றும், அப்பெண்களை வீரமாத்தி, தீப்பாய்ஞ்சாள், புடவைக்காரி என்றும் கூறுவர். இத்தகைய கற்கள் ஈரெட்டி, பெரிய புலியூர், அத்தியூர், காடன அள்ளி, சின்ன குள்ளம்பாளையம், தாமரைக்கரை, சோதனாபுரம், ஒத்தனை ஆகிய இடங்களில் உள்ளன. கன்னிவாடி மணலூரில் தீப்பாய்ந்து இறந்த ஏழு பெண்கள் பற்றி கன்னிவாடிப் பட்டயம் விளக்குகிறது.

பிறநடுகற்கள்

பச்கூர் ஈரெட்டிமலையில் ஒரு முனிவருக்கும், விசய மங்கலத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த புள்ளப்பை என்று பெண்ணுக்கும். கால்வாய் வெட்டிய காலிங்கராயனுக்கும் நடுகற்கள் உள்ளன.