பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

11. கொங்குப் பாண்டியர் காலம்


(கி.பி. 1265 - 1320)

முற்காலப் பாண்டியர்கள்

அரிகேசரி பராங்குச மாறவர்மன் (710-765) ஈரோடு மாவட்டப் பகுதியில் படைஎடுத்து வந்த போது எதிர்த்த அரசர்களை வென்று கொடுமுடிக்கு வந்து இறைவனை வணங்கிக் கொடைபல கொடுத்தான் என்று இவன் மகன் நெடுஞ்சடையன் பராந்தகனின் வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.

"ஈண்டொளிய மணிஇமைக்கும்
எழில் அமைந்த நெடும்புரிசை
பாண்டிக் கொடுமுடி சென்றெய்தி
பசுபதியது பத்மபாதம் பணிந்தேத்தி
கனகராசியும் கதிர்மணியும்
மனமகிழக் கொடுத்திட்டு"

என்பது வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதியாகும்.

நெடுஞ்சடையன் பராந்தகன் (765-790) கொங்கு நாட்டை வென்று "கொங்கர்கோன்" என்று பெயர் பெற்றான். காவிரி, நொய்யல் கரையில் இவன் படை நடமாடியுள்ளது. கொங்கு மன்னனைப் பிடித்துக் கொண்டு போய் மதுரையில் சிறை வைத்தான்.

இராசசிம்மபாண்டியன் (790-792) தான் கொங்கு முதல் தேனூர் வரை வென்றதாகக் கூறுகின்றான்.

கொங்குப் பாண்டியர்

சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251-1271) சேரர், சோழர், போசளர் ஆகியோரை வென்று தன் தம்பி வீரபாண்டியனைக் கொங்கு நாட்டுக்கு ஆட்சிப் பிரதிநிதியாக நியமித்தான் என்று திருவரங்கம் வடமொழிக் கல்வெட்டுக் கூறுகிறது. அவ்வீரபாண்டியனே கொங்குப் பாண்டியர் ஆட்சியைத் தாராபுரத்தில் நிறுவி 1265 முதல் கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தவன்.