பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஈரோடு மாவட்ட வரலாறு

தலைவன் மாலிக் காபூர் படையெடுப்பால் அழிந்து போன சிலம்பூர் (எண்ணமங்கலம்) பந்தீசுரமுடையார் கோயில் கி.பி. 1334இல் திருப்பணி செய்யப்பட்டது.

ஈரோடு வட்டம் சாத்தம்பூர் சிவன் கோயிலும், பெருந்துறை வட்டம் ஈங்கூர்ச் சிவன் கோயிலும் 'வல்லாள ஈசுவரன் கோயில்' என்று அழைக்கப்படுகின்றன.

இவன் மகாபிரதானி 'மோடகுலைய கமல மார்த்தாண்ட சித்கர கண்ட இம்மடி இராகுத்தராய மாதப்ப தண்டநாயகன்' என்பவன். இவன் தொறவலூரில் கோட்டை கட்டி அதிகாரம் செலுத்தித் தன் பெயரால் கல்வெட்டுக்களும் பொறித்துக் கொண்டான். அக்கோட்டை ‘நீலகிரி சாதாரன் கோட்டை', 'சித்கரகண்டன் கோட்டை' 'தண்டநாயகன் கோட்டை' என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இன்று 'டணாயக்கன்கோட்டை' என்று அழைக்கப்படுகிறது.

டணாயக்கள்கோட்டையில் மாதப்ப தண்டநாயகன் மூத்தமகன் வீரசிக்கய தண்ட நாயகன் தன் தந்தை பெயரால் "மாதவப் பெருமாள் கோயில்" கட்டினான். அதற்கு வடகரை நாட்டார் முடுதுறை, ஆப்பக் கூடல், திருக்கம்பூர், புலியூர், ஈங்கூர், பாலத்தொழு, பாப்பினி, புத்தூர், இடிகரை முதலிய ஊர்களைக் கொடையாக விட்டனர்.

பாப்பினிக்கும் 'கொங்கரமாரி மாதவநல்லூர்' என்று பெயரிடப்பட்டது. வீரசிக்கய தண்ட நாயகனுக்கு இரேச்சயன், சிங்கயன் என இரு தம்பியர் இருந்தனர். அவர்களும் மகாபிரதானி ஆகித் தங்கள் பெயரால் கல்வெட்டுக்களைப் பொறித்துக் கொண்டனர். சிங்கய தண்டநாயகள் ஆப்பக்கூடல் மானியத்தைத் திருவரங்கம் கோயிலுக்கு மாற்றி விட்டான்.

இவர்கள் கல்வெட்டுக்கள் ஆப்பக்கூடல், டணாயக்கன் கோட்டை மறவபாளையம், பாப்பினி, விண்ணப்பள்ளி ஆகிய ஊர்களில் உள்ளன. தற்போது டணாயக்கன்கோட்டை முழுவதும் பவானிசாகர் அணையில் முழ்கிவிட்டது.