பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

ஈரோடு மாவட்ட வரலாறு

அரசு அதிகாரிகளாகக் குறிக்கப்பட்டுள்ளனர். பிடாரியூர்க் கல்வெட்டில் காரியத்துக்குக் கர்த்தர் ஈரோட்டிலிருந்து அதிகாரம் செய்வதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

முதலாம் முத்து வீரப்பநாயக்கர் காலத்தில் அறச்சலூர் - காரையூர் இடையில் ஏற்பட்ட எல்லைச் சண்டையை 1617ஆம் ஆண்டு "காரியத்துக்குக் கர்த்தரான அரமனை மனுஷர் திம்மப்ப முதலியார்" தீர்த்து வைத்துள்ளார். அவர் ராதாபுரம் (தாராபுரம்) சீமைக்குக் கர்த்தர் எனக் குறிக்கப் பெறுகிறார். தாராபுரத்துத் தலத்துச் சம்பிரதி தட்சிணாமூர்த்தி அய்யன், தலத்துச் சேர்வை எல்லாரிமாவுந்தர் இன்னும் சில நாயக்கத் தலைவர்கள் பெயரும் குறிக்கப் பெறுகின்றன.

ஊஞ்சலூர் திருமலை நாயக்கர் கல்வெட்டில் கி.பி. 1538இல் அச்சுதராயர் காரியத்துக்குக் கர்த்தர் என்று குறிக்கப் பெறுகிறார். திருமலை நாயக்கர் அதிகாரி மெய்க்கும் பெருமாள் பிள்ளை பெயரும் குறிக்கப் பெறுகிறது. பூத்துறை நாட்டார் மேலோலையில் திருமலை நாயக்கரின் பூந்துறை நாட்டு அதிகாரிகளாக சிவக்குராசா, நரசிம்ம ராசா என்ற சகோதரர்கள் குறிக்கப் பெறுகின்றனர்.

வெங்கம்பூரில் உள்ள சொக்கநாத நாயக்கர் கல்வெட்டில் ஏற ரெட்டியார் என்ற அதிகாரி குறிக்கப் பெறுகிறார். அவர் அதிகாரத்தில் அவர் கீழ் அரைய நாட்டில் அல்லாள இளையா நாயக்கர் என்பார் நிர்வாகத்தில் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

வட்டமலையில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1708) காலத்தில் காங்கய நாட்டில் வேங்கி அழகிரி நாயக்கர் காரியத்துக்குக் கர்த்தராக இருந்தமை கூறப்படுகிறது. ஈரோடு பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயில் கல்வெட்டில் சேனைக்கார முதலி அக்காரெட்டி காரியத்துக்கு முகாமியானவர் என்று கூறப்படுகிறார்.

விசயநகர அரசுக்கு உட்பட்டவரை அவர்களுக்கு மதுரை நாயக்கர்கள் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் திறை செலுத்தியதாக ஹீராஸ் பாதிரியார் எழுதியுள்ளார்.