பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்



இந்த இனிய நிலைக்குத்தான் சித்தர்கள் எல்லாம் தவம் கிடந்தார்கள். அவர்கள் கண்களிலே புத்தொளி பூரித்துக் கிடந்தது. உடலிலே மிடுக்கு, நடையிலே கம்பீரம்.

முகம்தான் ஒருவரது பண்பையும், பாங்கையும், வெளிப்படுத்தும் விதத்தில் பரிபூரண பிரதி பிம்பமாக அமைந்திருக்கிறது. உங்கள் முகம், முகம் என்று மற்றவர்கள் சொல்லுகிறபோது, அது உங்கள்.அகம், அகம் என்று, உங்கள் அகத்தின் சுகம், சுகம் என்று எதிரொலித்துக் கொண்டிருப்பதை நீங்கள் திவ்யமாகக் கேட்டு மகிழலாம்.

முகத்தில் சிறு கட்டியோ, சிறு கீறலோ, அல்லது விகாரமான தேமலோ வந்துவிட்டால் கூட நிலை பதறிப்போய், ஈரக்குலை குமுறிப்போவதை நாம் பார்த்து இருக்கிறோம். அப்படி என்றால் முகத்தை எவ்வளவு அருமையாகக் காப்பாற்ற வேண்டுமென்ற ஆர்வமானது அறிவு கொண்ட அனைவரிடத்துமே இருக்க நாம் வேண்டுகிறோம்.

இருந்தாலும், 'முகம்' என்று சொல்வதற்குப் பதிலாக 'மூஞ்சி' என்கிறார்கள். 'முகரைகட்டை', என்கிறார்கள். அவ்வாறு சொல்லுகிறபோது, அதன் அடிப்படை ரகசியந்தான் என்னவாக இருக்கும்.

முகத்துக்கு மூஞ்சி என்கிறார்கள். மூஞ்சைப்பார் என்கிறார்கள். அந்தச் சொற்களை வெறுப்போடு உமிழ்கிறார்கள். கேட்பவருக்கு வேதனை வருவதுபோல கூச்சலும் போடுகிறார்கள்.