பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

ஆடுகளங்கள், ஓடுகளங்களில், கற்கள், முற்கள், கண்ணாடித் துண்டுகள் இல்லாமல், மேடு பள்ளம் இல்லாமல், சரிசெய்து வைத்துப் பாடம் கற்பிப்பது, பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும் வழிகளாகும்.

அவ்வாறு எதிர்பாராது ஏதாவது விபத்து நேர்ந்தால், முதலுதவி செய்வதற்கான, முதலுதவிப் பெட்டியை வைத்திருப்பது, புத்திசாலித்தனமாகும்.

8. கட்டுப்பாடு காத்தல்.

கட்டுப்பாட்டுடன் செய்கிற எந்த காரியமும், களிப்பையும், கவர்ச்சியையும், வெற்றியையும் மனத்திருப்தியையும் அளிக்கும்.

விறுவிறுப்பும் விவரம் இன்மையும் உள்ள சிறுவர்களுக்கு, ஆர்வத்தின் காரணமாக அவசரமும் ஆவேசமும் வந்து விடுவது இயற்கைதான். ஆகவே, அவர்களை அன்புடன், கட்டுக்கோப்பாகக் காத்திருக்க, செயல்பட, மாணவர்களைப் பழக்குவது, மாண்புமிகு செயலாகும்.

1. ஆசிரியரின் தோற்றம், ஆளுமை, பேச்சு, நடத்தை, பாடம் கற்பிக்கும்முறை, அன்பான கண்டிப்பு, ஆதரவான விதிமுறை கடைபிடிப்பு எல்லாம் மாணவர்களைக் கட்டுப்பாட்டுடன் இருக்க வைக்கும்.

2, ஆசிரியர் கற்றுத்தருகிற பயிற்சிகள், மாணவர்களுக்கு விருப்பம் அளிப்பதாக அமைகிறபோது, அவர்களும் மிக இணக்கத்துடன் செயல்பட உற்சாகம் அளிக்கும். ஆசிரியரின் பாடத்தேர்வும், கட்டுப்பாட்டை வளர்த்திட உதவும்.