பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

18



இப்படி உலகை ஆட்டுவிக்கின்ற உணவைத்தான். பிறந்த குழந்தை முதல் இறக்கும் மனிதர் வரை, எல்லோருமே விரும்புகின்றனர். வேட்டை நாய் போல விரட்டி விரட்டித் தேடி உண்ணுகின்றனர்.

ஏன் ?

வயிறு தான் காரணம்....

ஐந்தறிவு வரை உள்ள மிருகங்களுக்கும் இந்தப் பசி இருக்கிறது. ஆறறிவு உள்ள மனிதர்களுக்கும் இந்தப் பசி வேகம் இருக்கத்தான் இருக்கிறது.

ஆனால், இவர்களுக்கு இடையேயுள்ள வேறுபாட்டைப் பாருங்கள். அறிவுபடுத்தும் அலங்கோலத்தைப் பாருங்கள்.

இந்த உலகில் உயிர் வாழும் ஜீவராசிகளுக்குள்ளே, மனிதன் மட்டுமே தனக்குத் தேவையான உணவை வளர்க்கிறான். படைத்துக் கொள்கிறான். பெருக்கி உண்கிறான்.

வாயில்லா ஜீவன்கள் என்று நாம் வருணிக்கின்றோமே, அந்த மிருகங்கள், தங்களுக்குத் தேவையான உணவை வளர்ப்பதில்லை. எங்கு எது தமக்குப் பயன்படுமோ, அந்த இடத்திற்குப் போய் அதனை மேய்ந்தோ, தின்றோ, மகிழ்ந்து போகிறது.

சில மிருகங்கள், அவற்றை எடுத்துப் போய் சேர்த்து வைக்கிறது. சில மிருகங்கள் மற்ற மிருகங்களைக் கொன்று பசியாறிப் போய் விடுகின்றன.