பக்கம்:உணர்வின் எல்லை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் ஒரு புரட்சியாளர்

111

காந்தி அடிகட்கும் வழிகாட்டியாய் இருந்த கலங்கரை விளக்கம்—நம் தமிழ் அன்னையின் மணி வயிறு குளிரப் பிறந்த திருவள்ளுவ நாயனாரே என்று நினைக்கும்போது நம் உள்ளம் எல்லையில்லாத மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி எழுகிறது அன்றோ ?

உயர்ந்த உள்ளம் படைத்த கவிஞர்களைப்பற்றி ஆங்கிலப் பெருங்கவிஞர் ஒருவர், ‘கவிஞர்கள் இந்த உலகத்தின் தேர்ந்தெடுக்கப்படாத பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள்’ என்று அழகாகச் சொன்னார். எவ்வளவு உண்மையான மணி மொழி அது! ஈராயிரம் ஆண்டுகட்கு முன் ஒரு புலவர் எண்ணிய எண்ணம்-அவர் ஏட்டிலே எழுதிய எழுத்து-இன்று நாட்டில் சட்டமாய் விளங்குகிறது! குத்தும் கொலையுமாய்த் தொடங்கி முடியும்—நிலையற்ற பொருள்களுக்காக நடைபெறும் புரட்சிகள் காலவெள்ளத்தில் கரைந்து போகும். ஆனால், நிறை மொழி மாந்தர் தம் மறை மொழியின் துணைகொண்டு புரியும் கருத்துப்புரட்சி—அறிவுலகப் புரட்சி—அறப் புரட்சி வரலாறாய்—காவியமாய்—வான்மறையாய் வாழ்ந்து என்றென்றும் மன்பதைக்கு வழிகாட்டும் என்பதற்கு வள்ளுவர் வாய் மொழியினும் சிறந்த சான்று வேண்டுவதில்லை அன்றோ?